UIDAI எனப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படும் 12 இலக்க தனித்துவ அடையாள எண் ஆதார். இது நாட்டின் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். வங்கிக் கணக்கைத் தொடங்குதல் மற்றும் மொபைல் போன் இணைப்பு பெறுதல் போன்ற சேவைகளுக்கு இது பரவலாகத் தேவைப்படுகிறது.
ஆதார் சேவை மையத்துக்கு நேரில் செல்ல வேண்டியது அவசியம்
தற்போது, ஆதார் விவரங்களில் ஏதேனும் மாற்றங்கள் அல்லது திருத்தங்களை மேற்கொள்ள ஆதார் சேவை மையங்கள், இ-சேவை மையங்கள் அல்லது ஆன்லைன் போர்ட்டலுக்குச் செல்ல வேண்டும்.
இந்த நிலையில் மொபைலிலேயே திருத்தங்கள், சேர்ப்புகளை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. இந்தச் செயல்முறையை மேலும் எளிதாக்க, UIDAI ஆனது இ ஆதார் (E-Aadhaar) எனப்படும் ஒரு பிரத்யேக மொபைல் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது.
முக்கியத் தகவல்களில் மாற்றம்
இந்த செயலி மூலம், ஆதார் வைத்திருப்பவர்கள் தங்கள் விவரங்களை நேரடியாக தங்கள் மொபைல் போன்கள் மூலம் புதுப்பிக்க முடியும். சேவை மையங்களுக்கு நேரில் செல்லாமல், பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி போன்ற முக்கிய தகவல்களில் மாற்றங்களைச் செய்ய இந்த வசதி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய முயற்சி, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குடிமக்களுக்கு ஆதார் சேவைகளை எளிதில் அணுகக்கூடியதாகவும், மக்களுக்கு ஏற்ற வகையிலும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
எப்போது அமல்?
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் இந்த வசதி மேலும் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த இ- ஆதார் செயலி அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.