புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 


புதுச்சேரியில் தடுப்பூசி திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைவரும் பாராட்டும் அளவுக்கு இதுவரை 6 லட்சத்து 18 ஆயிரத்து 118 முதல் தவணை தடுப்பூசியும், ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 538 இரண்டாவது தவணை தடுப்பூசியும் என மொத்தம் 7 லட்சத்து 85 ஆயிரத்து 656 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நமது மாநிலத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதி வாய்ந்தவர்கள் 10 லட்சம் பேர். ஏறக்குறைய 60 சதவீதத்தை எட்டியிருக்கிறோம்.



அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற திட்டத்தோடு துரிதமாக செயல்பட்டு வருகிறோம். மக்களிடம் கொஞ்சம் தயக்கம் இருந்ததால் 100 சதவீதத்தை எட்ட முடியவில்லை. புதுச்சேரியில் எந்த சூழலிலும் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை. அதற்காக நிர்வாகத்தைப் பாராட்டுகிறேன். வீட்டுக்கே சென்று தடுப்பூசி போடுவது, கிராமங்களுக்கு சென்று போடுவது, தெருமுனைகளில் தடுப்பூசி போடுவது என 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோன மூன்றாவது அலை அக்டோபர் மாதம் மூன்றாவது வாரம் வரும் என்று மருத்துவ நிபுணர்களும், உலக சுகாதார நிறுவனமும் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.



மூன்றாவது அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் அளவுக்கு சுகாதாரத்துறை தயார் நிலையில் இருக்கிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திகொண்டால் மூன்றாவது அலையை மிக எளிதாக எதிர்கொள்ள முடியும். தீவிர சிகிச்சை பிரிவில் சேரவேண்டிய அவசியம் இருக்காது. பள்ளி கல்வித்துறையில் 90 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். செப்டம்பர் முதல் தேதியில் இருந்து பள்ளிகளைத் திறக்க யோசனை இருக்கிறது. அதற்காகப் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பாடத்திட்டத்தை ஒட்டி நாம் செயல்படுவதால் அதற்கேற்ப பள்ளிகளைத் திறக்க வேண்டியிருக்கிறது.


பெரியவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது உங்களுக்கு மட்டுமல்ல, வீட்டில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பானது. மூன்றாவது அலையால் குழந்தைகளுக்கு பாதிப்பு வரும் என்று பலரும் கருத்து தெரிவிப்பதால் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இல.கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைவராக இருந்து வழிநடத்திச் சென்றவர், அதற்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அதற்காக அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டேன். தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு நல்ல வாய்ப்புகளை அளித்து வருகிறது.




அன்மையில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரைச் சந்தித்தபோது தெலங்கானா, புதுச்சேரி மற்றும் தமிழக மக்களின் நலம் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டார்கள். குறிப்பாக, புதுச்சேரி நேரடி நிர்வாகத்தின் கீழ் இருப்பதால் நல்ல திட்டங்கள் கொண்டு வரப்படும். அதற்குப் பக்கபலமாக இருப்போம் என்று இருவரும் கூறியுள்ளனர் என துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.