சமீப காலமாகவே, விமானங்களில் தொடர் சர்ச்சை அரங்கேறி வருகிறது. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.


குடிபோதையில் பயணி செய்த காரியம்:


அதன் தொடர்ச்சியாக, இண்டிகோ விமானத்தில் இருக்கைக்கு நடுவே இருந்த பகுதியில் குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் வாந்தி எடுத்துள்ளார். அதுமட்டும் இன்றி, கழிவறைக்கு அருகே அவர் மலம் கழித்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த சம்பவம், கடந்த மார்ச் 26ஆம் தேதி, குவஹாத்தியில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் நடந்துள்ளது.


சம்பவம் நடந்த விமானத்தில் பயணித்த வழக்கறிஞர் ஒருவர், இது தொடர்பான புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தை சிறப்பாக கையாண்டதாக இண்டிகோ விமான நிறுவனத்தின் ஊழியருக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். 


விமானக்குழு, சகபயணிகள் அவதி:


வழக்கறிஞர் பாஸ்கர் தேவ் கோன்வார் ட்விட்டர் பக்கத்தில், "குடிபோதையில் பயணித்தவர், விமானத்தில் இருக்கைக்கு நடுவே இருந்த பகுதியில் வாந்தி எடுத்தார். கழிவறை முழுவதும் மலம் கழித்தார். விமான பணிப்பெண் ஷேவ்தா அனைத்து குழப்பங்களையும் தீர்த்து வைத்தார். பணிப்பெண்கள் அனைவரும் நிலைமையை சிறப்பாக கையாண்டனர். பெண் சக்தியை தலைவணங்குகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.


சமூக வலைதளத்தில் வெளியான புகைப்படங்களில், பணிப்பெண் ஒருவர் கையுறை மற்றும் முகமூடியை அணிந்து கொண்டு வாந்தி எடுத்ததாக கூறப்படும் இடத்தில் சுத்தம் செய்வது போல பதிவாகியுள்ளது. "இருக்கைக்கு நடுவே உள்ள பகுதியில் விமான ஊழியர்கள் கீழே குணிந்து அந்த இடத்தை சுத்தம் செய்தனர். 


ஆனால், அவர்களின் கண்ணியத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக இந்த புகைப்படங்களை பகிரவில்லை" என்றும் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம், சமூக வலைதளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தொடர் சர்சசைகள்:


இதேபோல, அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்தது. குடிபோதையில் இருந்த பயணி ஒருவர் சக பயணி மீது சிறுநீர் கழித்தது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 


அறுவை சிகிச்சை செய்து கொண்ட புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண், விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட மற்றொரு சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.


இருக்கையின் மேல் உள்ள கேபினில் தன்னுடைய கை பையை வைக்க உதவுமாறு அந்த பெண் பயணி, விமான பணிப்பெண்ணிடம் கேட்டுள்ளார். இதையடுத்து, அவர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம், ஜனவரி 30ஆம் தேதி நடந்தது குறிப்பிடத்தக்கது.