தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு தான் இந்தியாவின் குடியரசுத் தலைவராவேன் என நினைத்து பார்க்கவில்லை எனக் கூறியுள்ளார். 


தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக வந்த அறிவிப்பைக் கேட்டவுடன் அதிர்ச்சியடைந்ததாகக் கூறியுள்ள திரௌபதி முர்மு பாஜகவைப் பாராட்டியுள்ளார். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவரைத் தேர்வு செய்ததற்காக பாஜக அதன் `சப்கா சாத், சப்கா விகாஸ்’ என்ற கொள்கையில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து பேசிய திரௌபதி முர்மு, `நான் அதிர்ச்சியும், மகிழ்ச்சியும் கலந்த உணர்வை அடைந்துள்ளேன்.. ஒடிஷாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண்ணாக நான் நாட்டின் உயர்ந்த பதவிக்கு வேட்பாளராவேன் என நினைத்துப் பார்க்கவில்லை’ எனக் கூறியுள்ளார். 



தான் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைத் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்து தெரிந்துகொண்டதாகக் கூறியுள்ளார் திரௌபதி முர்மு. மேலும், ஒடிஷா மாநிலத்தின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவும் தனக்கு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். பிஜு ஜனதா தளத்தின் ஆதரவு அவருக்குக் கிடைக்குமா எனக் கேட்கப்பட்ட போது, திரௌபதி முர்மு, `நான் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் ஆதரவைப் பெறுவேன் என நம்புகிறேன். நான் இந்த மண்ணின் மகள். எனவே நானும் ஒடியா என்பதால் அனைத்து உறுப்பினர்களும் எனக்கு ஆதரவு தர வேண்டும் எனக் கோரும் உரிமை எனக்கு இருக்கிறது’ எனக் கூறியுள்ளார். 


ஒடிஷாவின் ராய்ரங்கப்பூரில் பிறந்தவர் திரௌபதி முர்மு. கடந்த 1997ஆம் ஆண்டு, ராய்ரங்கப்பூர் நகரப் பஞ்சாயத்துத் தேர்தலில் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் திரௌபதி முர்மு. அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். 



ராய்ரங்கப்பூரில் இரண்டு முறை எம்.எல்.ஏ பதவி வகித்த திரௌபதி முர்மு கடந்த 2009ஆம் ஆண்டு பிஜு ஜனதா தளம் பாஜக கூட்டணியை முறித்த போது, அப்போதைய சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர். மேலும், கடந்த 2015 முதல் 2021 வரை, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராகவும் பதவி வகித்தவர் திரௌபதி முர்மு. 


`அண்டை மாநிலமான ஜார்க்கண்டில் ஆளுநர் பதவியை ஏற்ற பிறகு, கடந்த 6 ஆண்டுகளாக நான் எந்த அரசியல் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை.. இந்த வாய்ப்பை நான் எதிர்பார்க்கவில்லை.. என்னை அனைவரும் ஆதரிப்பார்கள் என நம்புகிறேன்’ என திரௌபதி முர்மு கூறியுள்ளார். 


வரும் ஜூலை 18 அன்று நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு எதிராக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு இருக்கவுள்ளார்.