மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள `அக்னிபாத்’ சிறப்பு ராணுவத் திட்டம் காரணமாக வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. நாட்டின் பல பகுதிகளில் ரயில்களை எரித்தும், பொதுச் சொத்துகளை அழித்தும் போராட்டங்கள் நடைபெற்றிருந்த நிலையில், பல்வேறு இடங்களில் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். 


ஹரியானா மாநிலத்தின் பானிபட் பகுதியில் நடைபெற்ற போராட்டமும் அவ்வாறானது. இந்தப் போராட்டக் களத்தில் போராட்டக்காரர்களுக்கும், போராட்டத்தைக் கட்டுப்படுத்த அங்கு கூடிய அரசு அதிகாரி ஒருவருக்கும் இடையிலான உரையாடல் உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வாக உருமாறியுள்ளது. 


அக்னிபாத் சிறப்பு ராணுவத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவர் மேஜிஸ்திரேட் கமல் கிரிதரிடம், `உங்கள் குழந்தைகள் போராடிக் கொண்டிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?’ எனக் கேட்க, அவர் அந்த இளைஞரைக் கட்டியணைத்து அவரை சமாதானப்படுத்தி, `நீ எனக்கு மகன் மாதிரி தான்!’ எனக் கூறியுள்ளார். 



மேலும், அவர் போராட்டக்காரர்களிடம் அவர்களின் கோரிக்கையை அரசிடம் எடுத்து வைப்பதாகவும், யாரும் தங்கள் தொழில் வாழ்க்கையை இழந்துவிடக் கூடாது எனவும் கோரிக்கை விடுத்தார். `மகனே.. எனக்கு உன் தந்தையின் வயது.. உன் தொழில் வாழ்க்கை மொத்தமாக அழிந்துபோகலாம்.. உங்கள் கோரிக்கைகளை அரசிடம் எடுத்துச் செல்கிறேன்’ என அவர் அந்த இளைஞரிடம் கூறியுள்ளார். மேலும், போராட்டக்காரர்கள் யாரும் சட்டத்தை மீற வேண்டாம் எனவும், அரசு நிர்வாகம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நிலைக்குத் தள்ள வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். 



இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவர் `அக்னிபாத்’ திட்டத்தின் மீதான தனது அதிருப்தியைப் பகிர்ந்துள்ளார். `நான் கடந்த 9 ஆண்டுகளாக ராணுவத்தில் சேருவதற்காக தேர்வுகளுக்குத் தயாராகி வருகிறேன். இப்போது நான் 4 ஆண்டுகள் மட்டுமே சேவை செய்ய வேண்டும் எனவும், 25 சதவிகிதம் என்ற பிரிவில் இடம்பெறுவேனா என்னும் சந்தேகத்தோடு இருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.. நான் பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளேன்.. நான் பட்டதாரியல்ல.. இப்போது எனது 26 வயதில் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி, 3 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கே வந்தால் எப்படி எனக்கு எனது 30 வயதில் வேலை கிடைக்கும்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 


இந்தத் திட்டத்தில் பணியாற்றுபவர்களுக்காக பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது மத்திய அரசு. மத்திய ஆயுதக் காவல் படை, அசாம் ரைபிள்ஸ் முதலான படைகளில் சுமார் 10 சதவிகிதம் வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டையும், மூன்று ஆண்டுகள் தளர்வும் வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 



இந்தியக் கப்பற்படையைச் சேர்ந்த `அக்னிவீரர்களுக்கு’ கப்பல் போக்குவரத்துத் துறையில் வேலை வழங்கப்படும் எனவும் அந்தத் துறையின் அமைச்சகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. 


முப்படைகளின் தலைவர்கள் இன்று டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்துள்ளனர். கடந்த இரண்டு நாள்களில், `அக்னிபாத்’ விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சரும், படைகளின் தலைவர்களும் இரண்டாவது முறையாக சந்திப்பது குறிப்பிடத்தக்கது.