இது சுற்றுலா பஸ் அல்ல !


கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் தினமும் ஒரு பஸ் நின்றுகொண்டிருக்கிறது. அது ஒரு அடுக்குமாடி பஸ். கலர் கலராக வண்ணங்கள் பூசப்பட்ட பேருந்தில் , குழந்தைகளை கவரும் வகையில் கார்ட்டூன்களும் வரையப்பட்டிருக்கிறது. ஒரு வேளை இது சுற்றுலா பேருந்தாக இருக்குமோ என அருகில் சென்று பார்த்தால் அது ஒரு வகுப்பறை.



ஸ்மார்ட் யோசனை :


பல நாட்கள் ஓடி உழைத்து ரிட்டைர்மெண்ட் வாங்கிய பழைய பேருந்துகள் மற்றும் கொரோனா காலக்கட்டத்தில் ஓட்டாமல் செயலிழந்த பேருந்துகளை  ஆக்கப்பூர்வமாக மாற்ற கேரள அரசு முடிவு செய்துள்ளது.வீணாக பழைய இரும்பு கடையில் போடாமல் ,வகுப்பறை பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு வழங்கலாம் என முடிவு செய்தது கேரள போக்குவரத்துத்துறை. முதற்கட்டமாக இரண்டு பேருந்துகளை வழங்க திட்டமிடப்பட்டது. முதலில் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள போக்குவரத்து டெப்போவில் வயதாகி கிடத்தப்பட்ட அடுக்குமாடி பேருந்து ஒன்றினை மணக்காடு தொடக்க பள்ளிக்கு முதலில் வழங்க போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜு ஒப்புதல் அளித்துள்ளார்.


கடந்த மாதம் கேரள உயர்நீதிமன்றத்தில் KSRTC அளித்த அறிக்கையின்படி, அதன் டிப்போக்களில் பயன்படுத்தப்படாமல் சுமார் 239 தாழ்தள பின்-இன்ஜின் பேருந்துகள் உள்ளன.
நவீன வகுப்பறை :


வழங்கப்பட்ட பேருந்தை பட்டி டிங்கரிங் செய்து அதனை குழந்தைகளுக்கான கலர்ஃபுல்  வகுப்பறையாக மாற்றியுள்ளனர். அடுக்குமாடி பஸ்ஸில் இரண்டு தளங்கள் இருப்பதால் , கீழே உள்ள தளத்தில் டிவி வசதி ,வண்ண வண்ண டேபிள் சேர்கள் , புத்தகம் வைப்பதற்கான அலமாரி வசதிகள் இருக்கிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இது முற்றிலுமாக குளிர்சாதன வசதிகளுடன் இயங்குகிறது.


இங்குதான் குழந்தைகளுக்கு பெரும்பாலும் வகுப்புகள் எடுக்கப்படுகிறது. மேல்தளத்தை படிப்பதற்கும் குழந்தைகள் விளையாடுவதற்குமான பிளே ஏரியாவாக மாற்றியுள்ளனர்.ஆனால் டிரைவர் இருக்கையையும் ஸ்டேரிங்கையும் நீக்கினால் பஸ்ஸுக்கான அழகே போய்விடும் என்பதால் அதை மட்டும் அப்படியே விட்டுவிட்டார்களாம்.




வண்ண வண்ண ஓவியங்கள் :


மழலையருக்கான பிளே ஸ்கூலாக செயல்படும் இந்த பேருந்து வகுப்பறை முழுவதிலும் வண்ணங்களுக்கு பஞ்சமே இல்லை. சுற்றிலும் குழந்தைகள் கற்கும்  நோக்கிலும் அவர்களை கவரும் நோக்கிலும் புத்தகங்கள் , விலங்குகள் , பறவைகள் , மரங்கள் என அழகிய ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.


எவ்வளவு செலவானது?


பொதுவாக ஒரு பள்ளிக்கட்டம் எழுப்ப வேண்டுமென்றால் அதுக்கு போதுமான இடவசதி வேண்டும் , பல லட்சங்களும் செலவாகும். ஆனால் இந்த பஸ்ஸை பள்ளியாக மாற்ற பெரிதாக பட்ஜெட் இல்லை , சில லட்சங்கள்தான் ஆனது என்கின்றனர். கேரளாவில்  இரண்டு ஆண்டுகள் கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு தற்போதுதான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.