மூடநம்பிக்கை என்பது மக்களை காலம் காலமாக மூட்டளாக்கி வருகிறது. நம்பிக்கை என்ற பெயரில் கண்மூடித்தனமாக ஒரு விஷயத்தை நம்புவது என்பது சமூகத்தில் பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில், கேரளாவில் நடந்த நரபலி சம்பவம் நாட்டையே உலுக்கி இருந்தது.


மூடநம்பிக்கைக்கு எதிராக பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் தொடர் பிரசாரம் செய்தபோதிலும், அது நின்றபாடில்லை. அதன் தொடர்ச்சியாக, கழுதை கறி, பால் மற்றும் ரத்தத்தில் மருத்துவ பலன் இருப்பதாக ஆந்திராவில் சில பகுதி மக்கள் நம்பி வருகின்றனர்.


இந்த கண்மூடித்தனமான மூட நம்பிக்கை காரணமாக சட்டவிரோத கழுதை வதை அந்த மாநிலத்தில் சில பகுதிகளில் அதிகரித்து வருகிறது.


இந்நிலையில், சுமார் 750 கிலோ கழுதை இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவின் குண்டூர் மற்றும் பிரகாசம் மாவட்டங்களில் இருந்து 36 கழுதைகளை போலீசார், விலங்குகள் உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனமான PETAவுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் மீட்டனர்.


இதுகுறித்து PETA நிறுவனத்தின் பிரதிநிதி கோபால் சுர்பத்துலா கூறுகையில், "கழுதை பால் மற்றும் இறைச்சியை எடுத்து கொண்டு அந்த உணவு முற்றிலும் ஜீரணமாகும் வரை ஓடினால் கட்டுமஸ்தான் ஸ்டீல் போன்ற உடல் அமைப்பை பெறலாம் என மக்கள் நம்புகின்றனர். இந்த மூடநம்பிக்கையால் கழுதை இறைச்சிக்கான தேவை அதிகரித்தது. சிலர் கழுதை இறைச்சியை கிலோ ரூ.700 முதல் ரூ.800 வரை விற்பனை செய்து வருகின்றனர்" என்றார். கழுதை இறைச்சியை விற்பனை செய்வதும், சட்டவிரோதமாக கழுதைகளை கடத்துவதும் குற்றம் என்றாலும் சிலர் பிற மாநிலங்களில் இருந்து ஆந்திராவுக்கு கழுதைகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வருகின்றனர்.


இதுகுறித்து பேசிய கோபால் சுர்பத்துலா, "கழுதைப்பாலால் ஆஸ்துமா நோயாளிகளைக் குணப்படுத்த முடியும் என்ற கட்டுக்கதையும் உள்ளது. இதனால், அந்த பால் லிட்டர் 10,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கழுதையின் ரத்தம், பால், இறைச்சி ஆகியவற்றில் மருத்துவ குணங்கள் இல்லை என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஒரு தசாப்தத்தில் கழுதைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவ குணம் என்ற பெயரில் கழுதைகள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பீட்டா அமைப்பு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது" என்றும் தெளிவுபடுத்தினார்.


அதேபோல, கழுதை இறைச்சியை எடுத்து கொண்டால், ஆண்மை அதிகரிப்பதாகவும் குறிப்பிட்ட சிலர் நம்பி வருகின்றனர். இதன் காரணமாகவும், கழுதை இறைச்சியின் தேவை அதிகரித்துள்ளது. இதுபோன்ற மூடநம்பிக்கைகளை களைய மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம். கல்வியறிவு உள்ள, கல்வியறிவு இல்லாத என அனைத்து தரப்பு மக்களிடையேயும் இம்மாதிரியான மூட்டாள்த்தனமான நம்பிக்கை இருப்பது நம் சமூகம் எங்கு செல்கிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளகது.