பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியை பெண் போலீஸ் ஒருவர் காவல் வாகனத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது அவர் பேசிய பேச்சுதான் இப்போது வைரலாகி சர்ச்சையாகியுள்ளது.


கொல்கத்தாவில் பாஜக நடத்திய பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியை பெண் போலீஸ் ஒருவர் காவல் வாகனத்துக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது அவர் பேசிய பேச்சுதான் இப்போது வைரலாகி சர்ச்சையாகியுள்ளது.


மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்துகிறது. அங்கு பாஜகவுக்கும் மம்தா கட்சிக்கும் பகிரங்கமாக பெரிய அரசியல் போர் நடந்து கொண்டிருக்கிறது.


இந்நிலையில் தான் இன்று கொல்கத்தாவில் பாஜகவினர் மம்தா பானர்ஜிக்கு எதிராக ஒரு பேரணியை நடத்தினர். அதில் பங்கேற்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.


அப்போது போராட்டத்துக்கு தலைமை வகித்த சுவேந்து அதிகாரியை பெண் போலீஸ் ஒருவர் கையைப் பிடித்து காவல் வாகனத்திற்கு கூட்டிச் செல்ல முற்பட்டார். அப்போது சுவேந்து அதிகாரி " என்னைத் தொடாதீர்கள். நீங்கள் ஒரு பெண். நான் ஒரு ஆண். என்னைத் தொடாதீர்கள்" என்றார். அந்தப் பெண் காவலரும் திகைத்துப் போனார். அந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலானது. அதில், சுவேந்து அதிகாரி நான் சட்டத்தை மதிக்கும் நபர். என்னை கைது செய்ய ஆண் காவலரை அனுப்புங்கள் எனக் கூறுகிறார்.


இது போதாதா சுவேந்தி அதிகாரியை வைத்து செய்து கொண்டிருக்கின்றனர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர். 
ஆனால் சுவேந்து அதிகாரியோ, என்னை பெண் காவலர் மிக மோசமாக மரியாதையின்றி இழுத்துச் சென்றார். ஆனாலும் கூட அவர் ஒரு பெண் என்பதால் நான் கைகலப்பில் ஈடுபடாமல் மரியாதையாகவே ஆண் காவலரை அனுப்புமாறு சொன்னேன் என்று விளக்கமளித்துள்ளார். ஒவ்வொரு பெண்ணிலும் நான் துர்கை அம்மனைப் பார்க்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.






மேற்குவங்கத்தில் கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் , திரிணாமுல் கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ.க., சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரிக்கும் இடையே கடும் போட்டியில் இறுதியில் சுவேந்து அதிகாரியிடம் 1957 ஓட்டுகளில் மம்தா போராடி தோற்றார். இறுதியில், சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். நந்திகிராம் தொகுதியில் தோல்வியை ஏற்பதாக, மேற்குவங்க முதல்வர் மம்தா அறிவித்தார். 


அதன் பின்னர் சுவேந்து அதிகாரி மம்தாவின் கோபத்தை அதிகம் சம்பாதித்த நபர்களின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டார். இந்நிலையில் தான் சுவேந்து அதிகாரி பேசியது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. சுவேந்துவின் வீடியோவை வைத்து பாஜகவினரும், திரிணாமுல் கட்சியினரும் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளனர்.