மணிப்பூர் கலவரத்தை அடக்க உதவ தயார் என இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார்.


அமெரிக்க தூதர் செய்தியாளர் சந்திப்பு:


இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, முதல்முறையாக கொல்கத்தாவிற்கு பயணம் மேற்கொண்டு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் அம்மாநில ஆளுநர் உள்ளிட்டோரை சந்தித்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொள்வதற்கு முன்பாக தான் ஒரு முக்கிய சம்பவம் குறித்து பேச வேண்டும் என கூறினார்.


”இந்தியராக இருக்க வேண்டியதில்லை”


அதன்படி “மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டும் என நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். அமெரிக்கா கவலை கொள்வது ஏன் என கேள்வி கேட்பீர்கள். இது நாடுகளின் நட்புக்கான கவலை அல்ல. ஒரு மனினாக நாங்கள் கவலை கொள்கிறோம்.  மணிப்பூரில் நடைபெறும் வன்முறையில் குழந்தைகள் மற்றும் தனிநபர்கள் இறப்பதைப் பார்க்கும்போது கவலைப்படுவதற்கு நாங்கள் இந்தியராக இருக்க வேண்டியதில்லை. பல நல்ல விஷயங்களுக்கு அமைதிதான் முன்னோடி என்பதை நாங்கள் அறிவோம். நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் பல நல்ல விஷயங்கள் உள்ளன.  அமைதி இல்லாமல் அந்த நல்ல விஷயங்கள் அங்கு தொடர முடியாது.


இந்தியாவிற்கு உதவ தயார்..!


இந்தியா கேட்டால் எந்த வகையிலும் உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். இது இந்திய விவகாரம் என்று எங்களுக்குத் தெரியும். அமைதிக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம், அது விரைவில் வரலாம். ஏனென்றால், அந்த அமைதி வந்தால் தான் அங்கு அதிக ஒத்துழைப்பு, அதிக திட்டங்கள், அதிக முதலீடுகளை கொண்டு வர முடியும். நான் சொல்ல விரும்பும் ஒரு தெளிவான செய்தி என்னவென்றால்,  இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் அமெரிக்காவிற்கு முக்கியமானது. அதன் மக்கள், அதன் இடங்கள், அதன் திறன் மற்றும் அதன் எதிர்காலம் எங்களுக்கு முக்கியம்” என எரிக் கார்செட்டி பேசினார்.


மணிப்பூர் கலவரம்:


பாஜக ஆளும் மணிப்பூரில் கடந்த இரண்டு மாதங்களாக, குக்கி - மெய்தி இன மக்களுக்கிடையில் மோதல்போக்கு நிலவி வருகிறது. அதன் காரணமாக மாநிலத்தின் பல இடங்களில் வெடித்தக் கலவரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இந்தக் கலவரங்களால் பாதிக்கப்பட்டு, தங்கள் இருப்பிடங்களைவிட்டு இடம்பெயர்ந்து, முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். தேசிய அளவில் பெரும் பிரச்னையாக உருவெடுத்திருக்கும் இந்த மணிப்பூர் விவகாரத்தில் மாநில, மத்திய அரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலனளிக்காமல் போயின. அதன் காரணமாக அங்கு இன்னும் பதற்றம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் தான், மணிப்பூர் கலவரத்தை ஒடுக்க இந்தியாவிற்கு உதவ தயார் என அமெரிக்கா தரப்பில் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.