மத்திய உள்நாட்டு விமானத்துறை அமைச்சகம் மீண்டும் விமானக் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் நான்காவது முறையாக விலை உயர்வு அமலுக்கு வந்திருக்கிறது. கடந்த முறை 9 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்ட விமானக் கட்டணம் தற்போது 12 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக, உள்நாட்டு விமானங்கள் இரண்டு மாதங்கள் வரை பயன்படுத்தப்படாமல் இருந்தன. அவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, விமானத்துறையின் வருவாயைப் பெருக்குவதற்காக அரசு விமானக் கட்டணங்களில் குறைந்த பட்சக் கட்டணங்களையும், அதிகபட்சக் கட்டணங்களையும் நிர்ணயம் செய்து அறிவித்தது.
விமானக் கட்டண உயர்வு மீது எதிர்ப்புகள் எழுந்த பிறகும், கட்டணங்களை மீண்டும் உயர்த்தியது மத்திய அரசு. கடந்த பிப்ரவரி, மே, ஜூன் ஆகிய மாதங்களில் உயர்த்தப்பட்ட விமானக் கட்டணம், தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் இருந்து, விமானங்களை இயக்குவதற்கான பெட்ரோல் விலை உயர்வு தான் கட்டணங்களை உயர்த்துவதற்கான அடிப்படை காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா ஊரடங்கு காரணமாக, நிதி நிலை மோசமாகக் கொண்டு செயல்படும் விமான நிறுவனங்களுக்கு உதவும் வகையில் குறைந்தபட்சக் கட்டணம் நிர்ணியக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது. விமான இருக்கைகளுக்கான போட்டி அதிகளவில் இருக்கும் போது, பயணிகள் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்குவது தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காக அதிகபட்ச விலை நிர்ணியக்கப்பட்டிருப்பதாகவும் அரசு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
40 நிமிடங்களுக்குக் குறைவாகப் பயணிக்கும் விமானங்களில் குறைந்தபட்சமாக 11.5 சதவிகிதக் கட்டண உயர்வும், அதிகபட்சக் கட்டணமாக 12.8 சதவிகித விலை உயர்வும் வழங்கப்பட்டுள்ளன. 40 நிமிடங்களுக்கு மேல் பயணிக்கும் விமானங்களிலும் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
உதாரணமாக, விலை உயர்வு அமலுக்கு வருவதற்கு முன்பு, 40 நிமிடங்கள் பயணிப்பதற்கான குறைந்தபட்ச விலை 2600 ரூபாய்; அதிகபட்ச விலை 7800 ரூபாய். தற்போது விலை உயர்த்தப்பட்ட பிறகு, குறைந்தபட்ச விலை 2900 ரூபாய் எனவும், அதிகபட்ச விலை 8800 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இது விமானக் கட்டணம் மட்டுமே. இதில் பயணிகளின் பாதுகாப்புக் கட்டணம், விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணம், ஜி.எஸ்.டி முதலானவை சேர்க்கப்படவில்லை. விமானக் கட்டண உயர்வோடு இவற்றிலும் விலை உயர்வு ஏற்படலாம். நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, கடந்த ஆண்டு கடும் இழப்பைச் சந்தித்த உள்நாட்டு விமானங்கள் தற்போது மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, இப்படியான விலை உயர்வு அமலுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.