சேவல் கூவுவதால் தன்னால் காலை தூங்க முடியவில்லை என மருத்துவர் பக்கத்து வீட்டுக்காரர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலையில் சேவல் கூவியதும் மக்கள் எழும் காலமெல்லாம் இப்போது நகர்புறங்களில் காணாமல் போய்விட்டது. இன்றளவும் அதிகாலை விடிந்ததும் கிராம புறங்களில் சேவல் கூவும். இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்கள் இரவு முழுவதும் வேலை பார்த்துவிட்டு, அதிகாலை விடிந்ததும் தூங்க செல்கின்றனர்.
இந்தநிலையில், சேவல் கூவுவதால் தன்னால் காலை தூங்க முடியவில்லை என மருத்துவர் பக்கத்து வீட்டுக்காரர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அலோக் மோடி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பலசோயா பகுதியில் வசித்து வந்துள்ளார். தொழிலில் மருத்துவரான இவர், வேலை முடிந்து தினமும் தாமதமாக வருவார். ஆனால் அவரது பக்கத்து வீட்டில் சேவல் ஒன்று அதிகாலை 5 மணிக்கே கூவியது. இதனால் ஆத்திரமடைந்த அலோக் மோடி, காவல் நிலையம் சென்று கோழிகளை வளர்த்து வந்த தனது பக்கத்து வீட்டுக்காரர் மீது புகார் அளித்தார்.
அந்த புகாரில், ”பக்கத்து வீட்டு பெண் ஒருவர் அவரது வீட்டின் அருகே சேவல் மற்றும் நாயை வளர்த்து வருகிறார். தினமும் அதிகாலை 5 மணிக்கு அவரது சேவல் கூவுவதால் தான் மிகவும் சிரமப்படுகிறேன். நான் வேலையிலிருந்து இரவு தாமதமாக வீட்டிற்கு வருகிறேன், அதிகாலையில் சேவல் கூவுவது என்னை முற்றிலும் எரிச்சலூட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
புகாரை பெற்றுகொண்ட பலாசியா காவல் நிலையத்தின் பொறுப்பாளர் சஞ்சய் சிங் பெயின்ஸ், “சம்பந்தப்பட்ட இரண்டு தரப்பினரையும் நேரில் அழைத்து பிரச்சினைக்கு தீர்வு காண முடிவு செய்துள்ளோம். அப்போதும் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம். பொது இடத்தில் சட்டவிரோதமாக தொந்தரவு செய்வது என்ற சட்டப்பிரிவு 133ன் படி நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
ஆய்வறிக்கையின்படி, சேவல் ஒரு நாளைக்கு சுமார் 13-15 முறை கூவும். இதற்கு இனச்சேர்க்கை, ஆபத்து அறிவிப்பு போன்ற பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.