இந்தியாவில் ஓடும் ரயில்களில் மிக நீண்ட தொலைவிற்கு 9 மாநிலங்களைக் கடந்து பயணிக்கும் ரயிலைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.


இந்திய ரயில்வேயின் சிறப்பு:


இந்தியாவில் போக்குவரத்து சேவையில் ரயில் போக்குவரத்து மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. விமானங்கள் இணைக்காத பகுதிகளை கூட ரயில் போக்குவரத்து இணைக்கிறது. பேருந்து போக்குவரத்து மூலம் பல மாநிலங்களைக் கடந்து பயணிக்க முடியாது என்பதாலும், பேருந்து பயணத்திற்கான கட்டணமும் அதிகம் என்பதாலும், நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய பயணிகள் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்துவதோடு, புதிய புதிய திட்டங்களையும் அவ்வபோது அறிவிக்கிறது மத்திய அரசு. உலகிலேயே மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்கை வைத்திருக்கும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது இந்தியா. சுமார் 168 ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்திய ரயில்வே, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களை 1,26,611 கிலோ மீட்டர் தூரம் உள்ள இருப்புப் பாதைகள் மூலம் இணைக்கிறது. இந்திய ரயில் தடங்கள் 17 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு சுமார் முப்பந்தைந்து லட்சம் பயணிகளை சுமந்து செல்கிறது இந்திய ரயில்கள். இந்திய ரயில்வேயின் சிறப்புகளுக்கு மகுடம் வைத்தது போல் 9 மாநிலங்களை இணைத்து 80 மணி நேரத்தில் 4000 கிலோ மீட்டர்களை கடக்கிறது ஒரு ரயில்.


தி விவேக் எக்ஸ்பிரஸ்:


தமிழ்நாட்டின் கன்னியாகுமரி முதல் அஸ்ஸாமின் திப்ருகர் வரை பயணிக்கும் தி விவேக் எக்ஸ்ப்ரஸ் ரயில் தான் இந்த சிறப்புக்குரிய ரயிலாகத் திகழ்கிறது. கன்னியாகுமரியில் தொடங்கி பல்வேறு மாநிலங்கள், கால நிலைகள், சூழ்நிலைகள், மொழிகள் ஆகியவற்றைக் கடந்து செல்கிறது இந்த ரயில். இந்த ரயில் இந்தியாவில் நீண்ட தூரம் ஓடும் ரயில் மட்டுமல்ல, உளக அளவில் மிக நீண்ட தூரம் ஓடும் ரயில்களில் ஒன்றும் கூட.




விவேகானந்தர் நினைவாக தொடங்கப்பட்டது:


கன்னியாகுமரி முதல் திப்ருகர் வரையிலான 4,273 கிலோ மீட்டர் தூரத்தை 5 நாள்களுக்குள்ளாக அதாவது 80.15 மணி நேரத்தில் கடக்கிறது இந்த ரயில். இதற்கிடைப்பட்ட தூரத்தில் 55 நிறுத்தங்களில் நின்று செல்கிறது. கன்னியாகுமரியில் இருந்து திப்ருகருக்கு எந்த வழியில் செல்கிறதோ, அதே வழியில் மீண்டும் கன்னியா குமரிக்குத் திரும்புகிறது இந்த ரயில். தி விவேக் ரயில் தொடர் கடந்த 2011ம் ஆண்டு நவம்பரில், விவேகானந்தரின் 150வது பிறந்தநாளில் தொடங்கப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ரயில் சேவைகள் முடக்கப்பட்டபோது கடைசியாகதான் நிறுத்தப்பட்டது இந்த ரயில் சேவை.


55 ரயில் நிறுத்தங்கள்:


தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கி, நாகர்கோயில், திருவனந்தபுரம், கொல்லம், செங்கன்னூர், கோட்டயம், எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், வேலூர், ரேணிகுண்டா, நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, ஏலுரு, ராஜமுந்திரி, சாமல்கோட், விசாகப்பட்டிணம், விழியநகரம், ஸ்ரீகாகுளம், பிரம்மாபூர், கோர்தா, புவனேஷ்வர், கட்டாக், பலசோரி, காரக்பூர், அசன்சோல், துர்காபூர், பாகூர், ராம்புர்ஹத், மால்டா, கிஷன்கஞ்ச், சிலிகுரி, அலிர்புர்துவார், போங்கைகான், குவாஹத்தி, திமாபூர், தின்சுகியா, உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று இறுதியாக திப்ருகரைச் சென்றடைகிறது.




இந்த ரயிலானது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா, ஜார்கண்ட், சிக்கீம், பீகார், மேகாலயா, அஸ்ஸாம் என்று 9 மாநிலங்களை கடந்து செல்கிறது.


உலகின் மிக நீண்டதூரம் பயணிக்கும் ரயில்:


உலகில் மிக நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் ரஷ்யாவில் ஓடிக்கொண்டிருக்கிறது. உலகில் மிகப்பெரிய நாடான ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் தொடங்கி, வ்லாடிவோஸ்டாக் வரை பயணிக்கிறது அந்த ரயில். இடைப்பட்ட நகரங்களுக்கு இடையே உள்ள சுமார் 9,250 கிலோ மீட்டர் தூரத்தை ஆறு நாள்களில் கடக்கிறது இந்த ரயில். இந்தியாவில் ஓடும் தி விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலை விட 4,977 கிலோ மீட்டர் அதிகம் பயணிக்கிறது இந்த ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.