ஜிஎஸ்டி விவகாரத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். ஜிஎஸ்டி வசூலில் மேற்குவங்கத்திற்கு வந்துசேர வேண்டிய பங்கை மத்திய பாஜக அரசு வேண்டுமென்றே விடுவிக்காமல் இருப்பதாக குற்றஞ்சாட்டிய மம்தா பானர்ஜி, ஜிஎஸ்டி பங்கைப் பெற நான் என்ன பிரதமரின் காலில் விழுந்து கெஞ்ச வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


மேற்குவங்க முதல்வர் ஜார்கிராம் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் மத்தியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “100 நாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்த நிதி அவசியம். இது தொடர்பாக ஓராண்டுக்கு முன்னரே நான் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசினேன். ஆனால், நான் அவர் காலில் விழுந்து கெஞ்ச வேண்டும் என்று நினைக்கிறாரா? இந்தியா ஜனநாயக நாடுதானா? நாம் எல்லோரும் ஜனநாயக நாட்டில் தான் வாழ்கிறோமா? இந்தியா இல்லாவிட்டால் ஒரே கட்சி ஆட்சி நடக்கும் நாடாகிவிட்டதா? ஜிஎஸ்டி வரி வசூலில் எங்கள் பங்கை எங்களுக்குத் தாங்கள். இது எங்கள் பணம். இல்லாவிட்டால் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையையே ரத்து செய்யுங்கள். நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு எங்களுக்கு சேர வேண்டிய பங்கை கொடுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் எல்லோரும் பதவி விலகுங்கள்.


மேற்குவங்கத்துக்கு நியாயமாக சேர வேண்டிய நிதியை நிறுத்துவதாக மிரட்டுகிறார்கள். நாங்களும் அப்படியென்றால் ஜிஎஸ்டியை நிறுத்துவோம். நீங்கள் எங்களிடம் வரிசைய வசூல் செய்துவிட்டு எங்களுக்கான நியாயமான பங்குகளைக் கூட நிறுத்திவைக்க முடியாது” என்றார்.


முன்னதாக நேற்று பாஜகவின் சுவேந்து அதிகாரி, மாநிலத்தில் பல்வேறு திட்டங்களிலும் ஊழல் நடைபெறுவதால் மத்திய அரசு மாநிலத்திற்கான நிதியை நிறுத்தும் என்று எச்சரித்திருந்தார். இதை சுட்டிக்காட்டியே மம்தா இன்று ஆவேசமாகப் பேசினார்.


சுவேந்து அதிகாரிக்கு பதிலடி கொடுத்த முதல்வர் மம்தா பானர்ஜி, இப்படியே மேற்குவங்கத்தை பழிவாங்கிக் கொண்டிருந்தால் ஒரு நாள் இதுபோன்ற அரசியல்வாதிகள் பூஜ்ஜியமாவார்கள். 100 நாள் வேலை திட்டமாக இருக்கட்டும் அல்லது கிராமின் சடக் யோஜனாவாக இருக்கட்டும், பங்களா ஆவாஸ் யோஜனாவாக இருக்கட்டும் இவற்றை அமல்படுத்துவதில் மேற்குவங்கம் எப்போதும் முன்னணி மாநிலமாக இருந்துள்ளது என்றார்.


பழங்குடியின் சுதந்திர போராட்ட வீரரான பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த தினமான நவம்பர் 15 ஆம் தேதியான இன்று ஜன் ஜாதிய கெளரவ் தினமாக ( Jan Jatiya Gaurav Divas ) கடைபிடிக்க மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் ஜார்கிராமில் நாளை ஒட்டி பிர்சா முண்டாவிற்கு மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். அந்த நிகழ்ச்சியில் தான் மம்தா மேற்கூறியவாறு பேசினார்.


யார் இந்த பிர்சா முண்டா?


இவர் 1875ஆம் ஆண்டு இராஞ்சி  மாவட்டத்தில் உலிகாட் என்ற இடத்தில் பிறந்தார். இவரின் தந்தையாரின் பெயர் சுகண் முண்டா ஆவார்.


பிர்சா முண்டா ஆங்கிலேய அரசிடமும், உள்நாட்டு நிலவுடமைதாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களுக்காகப் போராடிய முதல் வீரர் ஆவார். தற்போதைய பீகார், ஜார்கண்ட் பகுதி பழங்குடி இனமக்களின் போராட்டத்திற்கு இந்திய விடுதலை இயக்கக் காலமான 19ஆம் நூற்றாண்டிலேயே வித்திட்டவர். பழங்குடியினர் தங்களது காடுகள், நில உரிமைகள், தங்களது காலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாக்க போராட்டம் நடத்தியவர்.