சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனையும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவையும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது சென்னை உயர் நீதிமன்றம்.


சிக்கலில் அமைச்சர்கள்:


இது தொடர்பான வழக்கு கடந்த 2011ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை 2012ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கடந்த 2021ஆம் ஆண்டு, திமுக ஆட்சி அமைத்து, குற்றம்சாட்டப்பட்டவர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு அமைச்சர்களான பிறகு, வழக்கை முடித்து வைக்குமாறு தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் அறிக்கை தாக்கல் செய்தது.


இதை ஏற்று, எம்எல்ஏ, எம்பிக்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம், வழக்கில் இருந்து ராமச்சந்திரனையும் தங்கம் தென்னரசுவையும் விடுவித்தது. ஆனால், இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.


தோண்டி எடுக்கப்படும் சொத்துக்குவிப்பு வழக்கு:


இந்த நிலையில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நீதிமன்றத்தின் மீது திமுகவுக்கு அளவுகடந்த நம்பிக்கை உள்ளதாக கூறினார். வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ள திமுக அமைச்சர்கள் தயார்.


ஏற்கனவே, முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுப்பது ஏன்? அதிமுக ஆட்சியில் ஏராளமானோர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன. பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தை நாடி நல்ல தீர்ப்பை பெற்றுள்ளோம். அதே  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில்தான் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நான் தொடர்ந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.


"பழிவாங்கும் எண்ணத்தில் வழக்கை விசாரிக்கக் கூடாது"


எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான 3,600 கோடி ரூபாய் டெண்டர் வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். உடனடியாக  உச்ச நீதிமன்றம் சென்று இடைக்காலத் தடை வாங்கினார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி தடை வாங்கியதால் மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வழக்கு விசாரணை நடைபெற்றது.


3,600 கோடி ரூபாய் வழக்கில் நீதிமன்ற நேரம் வீணடிக்கப்பட்டதாகக் கூறும் அதே நீதிபதிதான் தற்போதைய வழக்கில் நேரத்தை வீணடிக்கிறார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிப்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விமர்சித்தார். 


இந்த விமர்சனத்தை மேற்கொண்ட அதே நீதிபதி இரண்டு வாரங்களுக்கு பின் தனது நிலைபாட்டை மாற்றி கொண்டுள்ளார். வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க உரிமை இருந்தாலும், பழிவாங்கும் எண்ணத்தில் வழக்கை விசாரிக்கக் கூடாது" என்றார்.