அமைச்சர் கே.என். நேரு மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


வழக்கின் பின்னணி:


திருச்சியில் கடந்த 2009ஆம் ஆண்டு கட்டப்பட்ட 'கலைஞர் அறிவாலயம்' கட்டடத்துக்கான நிலம் தன்னிடம் இருந்து வாங்கப்பட்டதாகவும், பல கோடி மதிப்புள்ள நிலத்துக்கு மிகக் குறைந்த விலையே தரப்பட்டதாகவும் சீனிவாசன் என்பவர் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.


இது தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை  ரத்து செய்ய கோரி அமைச்சர் நேரு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.


இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது,  அமைச்சர் நேரு தரப்பில், இந்த வழக்கில் சமரசமாக சென்று விட்டதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. புகார்தாரர் தரப்பிலும் சமரச மனு  தாக்கல் செய்யப்பட்டது.   இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.


சிக்கலில் திமுக அமைச்சர்கள்:


சமீப காலமாகவே, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் தூசி தட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில், செந்தில் பாலாஜி, பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன், கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோருக்கு எதிரான வழக்குகள் திமுகவுக்கு தலைவலியாக மாறியுள்ளது. பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பொன்முடியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.


அடுத்ததாக, அனிதா  ராதாகிருஷ்ணன் வழக்கில் தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்திற்கு உதவிடுவதற்கு அனுமதி வழங்க தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.


இதை தொடர்ந்து, கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் அவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது. அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக அமைச்சர்கள் மீதான வழக்கு திமுகவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.


தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக இந்தியா (எதிர்க்கட்சிகள்) கூட்டணி தொடர் நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இப்படிப்பட்ட சூழலில், திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகள் தூசி தட்டப்பட்டு மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு வருகிறது.