Governor : ஆளுநர் தகுதிநீக்கம்?.. வில்சன் தனிமசோதா.. டெல்லி வரை சென்ற திமுக.. அடுத்து நடக்கப்போவது என்ன?

ஆளுநர்களை தகுதிநீக்கம் செய்ய அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யக்கோரி, திமுக சார்பில் மாநிலங்களவையில் தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

Continues below advertisement

தமிழக அரசு Vs ஆளுநர்

Continues below advertisement

தமிழக ஆளுநராக ஆர். என். ரவி பொறுப்பேற்றது முதலே, அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இந்தி மொழி, சனாதன தர்மம் மற்றும் இந்துத்துவாவிற்கு ஆதரவாக அவர் பேச, தமிழக அரசியல் தலைவர்கள் அதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆன்லைன் கேம்களுக்கு எதிராக தமிழக அரசு கொண்டு வந்த நிரந்தர தடைச்சட்டத்திற்கு, இதுவரை ஆர்.என். ரவி  ஒப்புதல் அளிக்காததும், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் தான் எனவும், ஏன் 4 நாட்கள் கழித்து மாநில அரசு என்.ஐ.ஏ. விசாரணைக்கு ஒப்புக் கொண்டது? பயங்கரவாதிகள் முக்கியமான ஆதாரங்களை அழித்துவிட்டனர் எனவும், தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் பேசியதும் அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆளுநரின் செயல்களை கண்டித்தும், அவரை திரும்பக் கோரியும்  ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டன. தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பெற கோரி,  குடியரசு தலைவரிடமும் மனு அளிக்கப்பட்டது. 

கேரள அரசு Vs  ஆளுநர்:

தமிழகம் மட்டுமின்றி, பாஜக மற்றும் அதன் கூட்டணியை சேராத கட்சிகள் ஆளும், அனைத்து மாநிலங்களிலும் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் சமீப காலங்களில் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. கேரளாவில் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை நியமிப்பதில், மாநில அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக, மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநரை அந்த பதவியில் இருந்து நீக்கும் வகையில்,  அவசர சட்டத்தை கொண்டு வந்து கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலக்கட்சிகள் Vs ஆளுநர்கள்:

எதிர்க்கட்சிகள் ஆளும் மேற்குவங்கம் மற்றும் ராஜஸ்தானிலும் இதுபோன்ற சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில், சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, இதேபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. மேற்கு வங்க பல்கலைக்கழக சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2022 மூலம் மாநிலத்தில் உள்ள 31 பொதுப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக முதலமைச்சரை நியமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அப்போதைய ஆளுநரும் தற்போதைய துணை குடியரசு தலைவருமான ஜகதீப் தங்கர் இந்த மசோதாவை மாநில அமைச்சரவைக்கு திருப்பி அனுப்பினார்.

அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய கோரிக்கை:

இத்தகைய நிலையில் தான், ஆளுநர்களை தகுதிநீக்கம் செய்ய அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யக்கோரி, மாநிலங்களவை  திமுக உறுப்பினர் வில்சன் அவையில் தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்தார். தொடர்ந்து பேசிய அவர், ஆளுநர்கள் நியமனம், நீக்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில் அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். ஆளுநர்கள் தனி அரசாங்கம் நடத்துகிறார்கள், அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் மக்கள் விருப்பத்தை செயல்வடிவம் பெற விடாமல் தடுக்கிறார்கள். தகுதியான நபர்கள் மட்டுமே ஆளுநர் பதவிக்கு  நியமிக்கப்பட வேண்டும். மாநில முதலமைச்சர்களின் ஆலோசனையுடன் ஆளுநர்களை நியமனம் செய்யும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என, வில்சன் வலியுறுத்தினார்.

 

Continues below advertisement