தமிழக மீனவர்களின் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை என கூறி மக்களவையில் இருந்து திமுக எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.


நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வந்தது. நேற்றுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைய இருந்த நிலையில் அயோத்தி ராமர் கோயில் தொடர்பான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்காக இன்று வரை நீட்டிக்கப்பட்டது. 


இந்த நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்படும் நிலையில் மாலை 5 மணியளவில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இதனிடையே இன்று வழக்கம்போல நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்கிய நிலையில், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருவதாக திமுக நாடாளுமன்ற குழு உறுப்பினர் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டினார்.


தொடர்ந்து இதுதொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என திமுக எம்.பி.,க்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனர்.  அப்போது தமிழ்நாடு மீனவர்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு பதில் கிடைக்கவில்லை. மீனவர்களின் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை என குற்றம் சாட்டினார். ஆனால் சபாநாயகர் ஓம் பிர்லா விவாதிக்க மறுப்பு தெரிவித்ததால் திமுக எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர். 


பிரமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதம் 


பிரதமர்  நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவித்திடவும், மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டு நடவடிக்கைக் குழுவினைப் புதுப்பித்திடவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கடிதம் எழுதியிருந்தார். அதில் தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வினை உறுதி செய்திடவும் மீனவ சமூகங்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும் உரிய தூதரக வழிகளைப் பின்பற்றிட வேண்டுமென்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். அதில் கூட்டு நடவடிக்கைகளின் மூலம் இது சாத்தியமாகும் என்பதால், இந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்ட நடவடிக்கைக் குழுவினைப் புதுப்பிக்க, விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையை எடுக்குமாறும் தனது கடிதத்தில் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.