Just In





Pariksha Pe Charcha 2023: மாணவர்கள் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசலாம்; ஜன.27 வரை விண்ணப்பிக்க அவகாசம்
2018-ம் ஆண்டில் இருந்து ’பரிக்ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.

பள்ளி மாணவர்களின் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரைப் பிரதமர் மோடி சந்திக்கும் பரிக்ஷா பே சார்ச்சா ஜனவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு அன்றைய தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2018-ம் ஆண்டில் இருந்து ’பரிக்ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம், அதில் இருந்து வெளியேறுவது எப்படி என்பன உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். இந்த முறை 6-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
நேரடியாக நடைபெற்ற பரிக்ஷா பே சார்ச்சா
முதன்முறையாக, பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சியான “பரிக்ஷா பே சார்ச்சா 1.0”, கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி டெல்லியில் உள்ள டால்கடோரா மைதானத்தில் நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவர்களுடனான “பரிக்ஷா பே சார்ச்சா 2.0” கலந்துரையாடல் நிகழ்ச்சியும் அதே மைதானத்தில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி நடைபெற்றது. மூன்றாவது ஆண்டாக பள்ளி மாணவர்களுடன் நடைபெற்ற “பரிக்ஷா பே சார்ச்சா 2020” கலந்துரையாடல் நிகழ்ச்சி டால்கடோரா மைதானத்தில் 2020ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்றது.
இந்த சூழலில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற்ற “பரிக்ஷா பே சார்ச்சா 2021” நிகழ்ச்சியில் உலகெங்கும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாடினார். இதற்கிடையே 2023ஆம் ஆண்டுக்கான பரிக்ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி நேரடியாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி ஜனவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது.
கலந்துகொள்வது எப்படி?
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள மாணவர்கள், mygov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு போட்டி வைக்கப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம்.
பரிக்ஷா பே சார்ச்சா நிகழ்ச்சிக்கான முன்பதிவு டிசம்பர் 30ஆம் தேதியுடன் முடிவு பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும் ஜனவரி 27ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
PPC 2023ஆம் ஆண்டுக்கான தலைப்புகள்
* உங்களின் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தெரிந்துகொள்ளுங்கள்
* நம் கலாச்சாரமே நமது பெருமை
* என் புத்தகம், என்னுடைய உத்வேகம்
* வருங்காலத் தலைமுறைக்காக சூழலைக் காப்பாற்றுங்கள்
* என் வாழ்க்கை, எனது நலம்
* என்னுடைய ஸ்டார்ட் அப் கனவு
* STEM கல்வி/ எல்லைகள் இல்லாத கல்வி
* பள்ளிகளில் கற்க பொம்மைகள் மற்றும் விளையாட்டுகள்
பரிக்ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், தூர்தர்ஷன், வானொலி உள்ளிட்ட மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஊடகங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.