எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ள இந்தியா கூட்டணியை சார்ந்த பிரமுகர்கள் பங்கேற்கும், திமுக சார்பிலான கருத்தரங்கு இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.
ஜனநாயகத்திற்கான கருத்தரங்கு:
திமுக சார்பில் ஜனநாயகத்திற்கான I.N.D.I.A எனும் தலைப்பிலான கருத்தரங்கு, டெல்லியில் உள்ள அக்கட்சியின் அலுவலகமான அண்ணா கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற உள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள கருத்தரங்கில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள், பல்வேறு துறகளை சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை பகிர உள்ளனர்.
நோக்கம் என்ன?
சமூக நீதி, சமத்துவம் மற்றும் மாநில உரிமைகளின் கொள்கைகளை நிலைநிறுத்தி, அரசியலமைப்பு நெறிமுறைகளைப் பாதுகாப்பதற்காக ஒன்றிணைவது பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதை நோக்கமாகக் கொண்டு இந்த கருத்தரங்கு நடைபெறுவதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் அமர்வு:
இரண்டு அமர்வுகளாக இந்த கருத்தரங்கு நடைபெற உள்ளது. முதல் அமர்வு மாலை 4.15 மணிக்கு தொடங்க உள்ளது. அதில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநரின் பங்கு என்ன என்ற தலைப்பில், நாடாளுமன்ற மக்களவையின் முன்னாள் செயலாளர் தங்கப்பன் ஆச்சாரி உரையாற்ற உள்ளார். தொடர்ந்து, கூட்டாட்சி - சமூக நீதிக்கான வாசல் என்ற தலைப்பில் பேராசிரியர் ராஜன் குரை கிருஷ்ணனும், 2023 இல் சமூக நீதிக்கான மொழி என்ற தலைப்பில் தி வைர் நிறுவனத்தின் எடிட்டர் சீமா சிஸ்டி, யாருக்கான வளர்ச்சி மற்றும் எவ்வளவு என்ற தலைப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தீப் தீக்ஷித் மற்றும் நிதி கூட்டாட்சியை செயல்படுத்துவதை தவிர்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தொடர்பாக பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷும் உரையாற்ற உள்ளார்.
இரண்டாவது அமர்வு:
இந்த கருத்தரங்கின் இரண்டாவது அமர்வு மாலை 6.25க்கு தொடங்குகிறது. தமிழ்நாடு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இதனை தொடங்கி வைக்கிறார். அதைதொடர்ந்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் சிறப்புரையாற்றுகிறார். பின்பு காங்கிரசை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ், திரிணாமுல் காங்கிரசை ஜவஹர் சிர்கார், சிவசேனாவை சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ராம் கோபால் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஜான் பிரிட்டாஸ், ஆம் ஆத்மியை சேர்ந்த சஞ்சய் சிங் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த மனோஜ் குமார் ஜா ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்று பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணி:
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 26 முக்கிய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A எனும் கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதன் முதற்கூட்டம் பாட்னாவில் நடைபெற்ற நிலையில், பெங்களூருவில் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இந்நிலையில், அந்த கூட்டணியின் அடுத்த கட்ட நடவடிக்கையாக, ஜனநாயகத்திற்கான I.N.D.I.A எனும் தலைப்பிலான கருத்தரங்கு இன்று நடைபெற உள்ளது. இதனிடையே, இந்த மாத இறுதியில் மும்பையில் கூட உள்ளதாக கூறப்படும் அந்த கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம், அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.