விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்கள் தங்கள் வாழ்நாள் முழுவதுமே ஜீவனாம்சம் பெறத் தகுதியானவர்கள் என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


முஸ்லிம் பெண்கள் விவாகரத்து கோரினாலோ அல்லது கணவர் விவாகரத்து அளித்தாலோ இதாத் எனப்படும் காத்திருப்பு காலம் மட்டுமே அவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.


இதாத் காலம் கணக்கீடு


கணவன் இறந்தால் மனைவி உயிருடன் இருக்கும் பட்சத்தில் அம்மனைவியானவள் நான்கு மாதமும் பத்து நாட்களும் இத்தா காலத்தை அனுஷ்டிக்க வேண்டும். அவள் கருவுற்றவளாக இருப்பின் குழந்தை பெறும் வரை இத்தா காலமாக அமையும். அது ஒரு நாளாகவோ அல்லது பத்து மாதங்களாகவோ அல்லது ஒரு சில மணித்தியாலங்களாகவோ அமையக் கூடும்.
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். 


கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும்.
 
கணவனால் விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கான இத்தா காலம் மூன்று மாதவிடாய்க் காலம் ஆகும்.


விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்.


இவ்வாறாக இதாத் அல்லது இத்தா காலம் கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் தான் அலகாபாத் உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.


முன்னதாக காசியாபாத் குடும்ப நல நீதிமன்ற முதன்மை நீதிபதி சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு இதாத் காலம் வரை ஜீவனாம்சம் தர உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து அந்தப் பெண் மேல் முறையீடு செய்திருந்தார். 


இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், முஸ்லிம் கணவர் தன் மனைவியை விவாகரத்து செய்யும்போது மனைவியின் எதிர்கால வாழ்வாதார தேவைகளை யோசித்து அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மனைவியின் வசிப்பிடம், உணவு, உடைகள் இன்னும் பிற அத்தியாவசியத் தேவைகளுக்கு நியாயமான பங்களிப்பை செய்ய வேண்டும்.


முஸ்லிம் சட்டம் 1986ன் சட்டப்பிரிவு 3 உட்பிரிவு 3 கணவர் இதுபோன்ற நியாயமான தேவைகளுக்கு உரிய ஆதாரங்களை வழங்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.


ஷாபானு வழக்கு:


இந்திய நீதித்துறை வரலாற்றில், முக்கியமான தீர்ப்புகள் என்று பட்டியலிட்டால் ஷா பானு வழக்கு முதல் பத்து வழக்குகளில் ஒன்றாக இருக்கும். இன்றளவும் பேசப்படும். ஒரு பெண் தனக்கான உரிமை கேட்டு சுமார் ஏழு வருடங்கள் நடத்திய சட்டப் போராட்டம்.


1932ம் வருடம் முகமத் அகமத் கான், ஷா பானுவை மணக்கிறார். அவர்களின் குடும்ப வாழ்வில் ஐந்து குழந்தைகள் அவர்களுக்குப் பிறந்தன. முகமத் அகமத் கான் ஒரு வழக்கறிஞர். அவர் இன்னுமொரு பெண்ணையும் தன் துணையாக இணைத்துக்கொண்டார்.


இரண்டு மனைவிகளுடன் சில காலம் குடும்ப வாழ்வில் ஈடுபட்ட அவர், ஷா பானுவைத் தன் இல்வாழ்வில் இருந்து விலக்கி வைக்கிறார். அப்போது அந்தப் பெண்ணுக்கு 62 வயது. அப்படி விலக்கி வைக்கும்போது அவர்களுக்குள் ஜீவனாம்ச ஒப்பந்தமாக அகமத் கான், ஷா பானுவுக்கு மாதம் 200 ரூபாய் தருவதாக ஒப்புக் கொள்கிறார். அதன்படியே சில காலம் கொடுத்தும் வந்திருக்கிறார். இந்த ஜீவனாம்ச தொகையையும் ஏப்ரல் 1978ல் வழங்காமல் நிறுத்தினார். தன் மனைவி ஷா பானுவை, இஸ்லாமிய முறைப்படி, தான் தலாக் செய்துவிட்டதால், இஸ்லாம் வழிமுறைகளின்படி ஷாபானு இனிமேல் தன் மனைவி இல்லை என்பதும், அவருக்கு மாதா மாதம் ஜீவனாம்சம் தர வேண்டியது இல்லை என்பதும், ஷாபானுவுக்கு மொத்தமாக ஒரு தொகை தந்துவிட்டால் போதுமானது என்பதும் முகமத் அகமது கான் வாதம்.


இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு (Code of Criminal Procedure) 125ன் கீழ் தனக்கு தன் கணவர் முகமத் அகமத் கான் ஜீவனாம்சம் தர வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.  இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தை பாதிக்காது என்று கூறி, 1979 ஆம் ஆண்டில் ஷா பானுவுக்கு மாதா மாதம் 25 ரூபாய் ஜீவனாம்சமாக முகமது அகமது கான் வழங்கவேண்டும் என இந்தூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.