இலங்கையில் டிட்வா புயலானது கோரத்தாண்டவம் ஆடியுள்ள நிலையில் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளை ஆப்ரேஷன் சாகர் பந்து மூலம் இந்தியா அனுப்பியுள்ளது.
புரட்டிப்போட்ட டிட்வா:
இலங்கையை ஒட்டி நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி டிட்வா புயலாக மாறியது, இதனை தொடர்ந்து இலங்கையின் கிழக்கு கடற்கரை பகுதியில் இடைவிடாமல் பெய்த கனமழையால் வீடுகள், சாலைகள், ரயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மழைக்கு இதுவரை 90 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100-க்கும் மேற்ப்பட்டோரை காணவில்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 20,500 இராணுவ வீரர்கள் களத்தில் உள்ளனர்.
தலைநகர் கொழும்பிலும் பல பகுதிகள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் இன்று 200 மி.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உதவிக்கரம் நீட்டிய இந்தியா
பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக ஆப்ரேஷன் சாகர் பந்து தீட்டத்தின் கீழ் இந்தியா பேரிடர் கால உதவிகள் மற்றும் நிவாரண பொருட்களை போர்க்கால அடிப்படையில் அனுப்பியுள்ளது.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் டிட்வா புயலால் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் விரைவான மீட்சிக்காக நான் பிரார்த்திக்கிறேன்.
நமது நெருங்கிய கடல்சார் அண்டை நாடான இந்தியாவுடன் ஒற்றுமையுடன், ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ் நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கியமான HADR ஆதரவை அவசரமாக அனுப்பியுள்ளது.
மேலும் உதவி தேவைப்பட்டால் உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் தொலைநோக்கு பார்வை மஹாசாகர் ஆகியவற்றால் வழிநடத்தப்பட்டு, இந்தியா அதன் தேவைப்படும் நேரத்தில் இலங்கையுடன் தொடர்ந்து உறுதியாக நிற்கிறது என்று தெரிவித்தார்.
80 டன் நிவாரண பொருட்கள்:
இதற்கான நிவாரண பொருட்களை இந்திய ராணுவம் தங்களது விமானம் மூலம் கொழும்புவுக்கு சென்றுள்ளது. இது குறித்து வெளியுரவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் வெளியிட்டுள்ள பதிவில் "ஆபரேஷன் சாகர் பந்து தொடங்குகிறது. தார்பாய்கள், போர்வைகள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் சாப்பிடத் தயாராக உள்ள உணவுப் பொருட்கள் உட்பட சுமார் 12 டன் நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்ற இந்திய விமானப்படையின் C-130J விமானம் கொழும்பில் தரையிறங்கியது" என்று தெரிவித்துள்ளார்.