இந்தியாவில், பொதுமக்களின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் கார்டு உள்ளது. ஆதார் கார்டை குழந்தைகளை பள்ளிக்கு சேர்ப்பது முதல் அரசு திட்டங்கள் வரை பலவற்றுக்கு முக்கிய ஆவணமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில், மாற்றங்களை அப்டேட் செய்வது அவசியம். பெயர், முகவரி போன்றவற்றை சற்று எளிதாக மாற்ற முடிந்தாலும், ஆதாரில் பதியப்பட்டுள்ள மொபைல் எண்ணை மாற்றுவது சற்றே சிரமமான வேலை. அந்த கஷ்டம் விரைவில் தீரப் போகிறது. ஆம், மொபைல் செயலி மூலமாகவே ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணை மாற்றும் வசதி விரைவில் வர உள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆதாரில் இணைக்கப்பட்ட எண்ணை செயலி மூலமாகவே மாற்றலாம்
பொதுவாக, நமது ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி, பிறந்த தேதி போன்ற விவரங்களை, ஆன்லைன் மூலமாகவே நாம் புதுப்பித்து கொள்ள முடியும். ஆனால், ஆதாரில் உள்ள மொபைல் எண், பயோமெட்ரிக் விவரங்களை, அருகில் உள்ள இ-சேவை மையம், வங்கிகள் அல்லது தபால் நிலைய அலுவலகத்திற்கு நேரில் சென்று மட்டுமே புதுப்பிக்க முடியும்.
ஆனால், அங்கு கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், மக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த நிலையை மாற்றும் வகையில், ஆதார் ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஆதார் ஆணையம், “விரைவில் வருகிறது. ஆதாரில் மொபைல் எண்ணை, வீட்டில் இருந்தபடியே ஓடிபி மற்றும் முக அங்கீகாரம் மூலம் மாற்றிக் கொள்ளலாம்.
ஆதார் மையங்களில் இனியும் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. காத்திருங்கள்...“ என்று கூறியுள்ளது.
ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மாற்ற பலரும் படாதபாடு பட்டுவரும் நிலையில், ஆதார் ஆணையத்தின் இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு நிச்சயம் ஒரு மகிழ்ச்சியான செய்தி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.