ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், கேரளாவின் மலபுரம் மாவட்டத்தில் டீக்கடை உரிமையாளர் ஒருவர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். வாடிக்கையாளர் ஒருவர், டீயின் தரம் குறித்து ஆத்திரமடைந்ததால் அவரைக் கத்தியால் குத்தியதாக கேரள போலீசார் தெரிவித்தனர்.
மலபுரம் தனூரில், முனாஃப் என்பவர் சிறிய டீக்கடை நடத்தி வருகிறார். செவ்வாய் அன்று நிகழ்ந்த சம்பவத்தில், வாடிக்கையாளர் சுபைர் என்பவர் டீயில் சர்க்கரை குறைவாக இருந்ததால் மனமுடைந்தததாகத் தெரிகிறது. இதை அடுத்து வாடிக்கையாளர், முனாஃபுடன் வாக்குவாதம் செய்து, கத்தியால் குத்தியுள்ளார்.
ஒரு ஊழியர் கூறுகையில், சுபைர் என்பவர் காலையில் ஒரு கோப்பை தேநீர் குடிக்க வந்தார்.அவருக்கு டீ பரிமாறிய பிறகு, முதலில் சர்க்கரை குறைவாக இருப்பதாக புகார் கூறினார், பின்னர் அவர் கோபப்பட ஆரம்பித்தார், முனாஃப் அவரை சமாதானப்படுத்த முயன்றார், ஆனால் அவர் தொடர்ந்து கோபமடைந்தார், பின்னர் அவர்கள் இருவரும் ஒவ்வொருவராக தள்ளுமுள்ளுவில் ஈடுபடத் தொடங்கினர். சிறிது நேரம் கழித்து சுபைர் சென்றுவிட்டார்.ஆனால் பின்னர் திரும்பி வந்து தான் வைத்திருந்த கத்தியால் முனாப்பை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்" என்று டீக்கடை ஊழியர் கூறினார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த முனாஃப் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.ஆனால் அவரது உடல்நிலையைப் பார்த்த அவர் பின்னர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து சுபைரை போலீசார் கைது செய்தனர்.
சர்க்கரைப் பிரச்னை கொலைவெறித் தாக்குதல் வரை சென்றிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
....................................................
மற்றுமொரு முக்கிய கேரள செய்தி..
கலைப் படைப்புகள் என்பது சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவை என்று கூறியுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். அதனால் அதை வேறு எந்த அளவுகோல் கொண்டும் பிரித்துப் பார்க்காமல் கலைப் படைப்புகளை ரசிக்க வேண்டும் என்று கூறினார்.
61வது கேரள கலைத் திருவிழாவின் தொடக்க விழாவில் பினராயி விஜயன் இவ்வாறாகப் பேசினார். அவர் பேசியதாவது: இந்தத் திருவிழா கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை பறைசாற்றும் களம். இங்கே சாதிக்கும், மதக்கும் இடமில்லை. கலை சாதி, மதம் கடந்தவை.
திருவிழாக்களை இப்படித்தான் நாம் கொண்டாட வேண்டும். அப்படி இருந்தால் தான் கேரளா என்றும் அமைதி, மகிழ்ச்சி, மதச்சார்பின்மையின் மையமாக இருக்கும்.
இந்த திருவிழாவில் 14 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். அவர்கள் அனைவரும் வெற்றி பெறுவது எளிதல்ல. அதனால் நிகழ்ச்சியில் பங்கேற்பதும் திறமைகளும் பறைசாற்றுவதும் தான் இலக்காக இருக்க வேண்டும்.
நிகழ்ச்சியில் பங்கேற்றல் என்பதே மிகப்பெரிய சாதனை தான். இந்த மனோபாவம் மாணவர்கள் மனங்களிலும் இருக்க வேண்டும், பெற்றோரின் எண்ணங்களிலும் இருக்க வேண்டும்.
குழந்தைகளின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வது இந்த அரசாங்கத்தின் கடமை. அதை நோக்கி அரசாங்கம் மிக முக்கியமான நகர்வுகளை எடுத்துவருகிறது. அதில் ஒன்று போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆசியாவின் மிகப்பெரிய கலைத் திருவிழாவான இந்தத் திருவிழாவை நாம் நடத்த முடியவில்லை.
கொரோனா பெருந்தொற்றால் குழந்தைகள் பலரும் மன அழுத்தத்தில் இருந்தனர். இப்போது நடைபெறும் இந்த கலைத் திருவிழா மாணவர்களுக்கு ஆசுவாசம் தரும்.
இருப்பினும் உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா பெருந்தொற்று மீண்டும் பரவுவதால் இவ்வளவு பெரிய கலை நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.