இந்திய தேசிய சின்னத்தில் இடம்பெற்றுள்ள சிங்கத்தை வரைவதற்காக, மூன்று மாதங்கள் சரணாலயத்திற்குச் சென்றுவந்ததாக ஓவியர் தினநாத் பர்கவாவின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.


தினநாத் பர்கவா குடும்பம் பேட்டி:


புதிதாக கட்டப்பட்டுவரும் நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேல் இந்திய தேசியச் சின்னமான அசோக தூணில் உள்ள நான்குமுகச் சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். இந்த சின்னம் உண்மையானச் சின்னத்தைக் காட்டிலும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. உண்மையான சின்னத்தில் சிங்கத்தின் முகம் சாந்தமாக உள்ளது. புதிய சின்னத்தில் சிங்கம் கோபமாக உள்ளது என்று விமர்சித்துள்ளனர். இந்த நிலையில், இந்திய தேசியச் சின்னத்தை முதலில் வடிவமைத்தவர்களில் ஒருவரான தினநாத் பர்கவாவின் குடும்பத்தினர் பேட்டியளித்துள்ளனர்.




தினநாத்துக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு:


இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, இந்திய அரசியலமைப்பின் அசல் கையெழுத்துப் பிரதியை வடிவமைக்கும் பணியை, ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதன் கலாபவன் முதல்வரிடமும், பிரபல ஓவியருமான நந்தலால் போஸிடமும் ஒப்படைத்தார். அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புப் பக்கங்கள் மற்றும் பக்கங்களுக்குத் தேவையான படங்களை வரையும் பொறுப்புக்கு க்ரிபால் சிங் ஷெகாவத், ஜகதீஷ் மிட்டல், கவுரி பன்ஜா உள்ளிட்ட 5 பேரை நந்தலால் தேர்தெடுத்தார்.  


“அசோகத் தூணில் உள்ள படத்தை வடிவமைக்கும் பணியை தனது கணவர் தினநாத் பார்கவாவிடம் நந்தலால் போஸ் ஒப்படைத்தார். இந்த பணியை என் கணவரிடம் ஒப்படைத்த போது அவருக்கு 21 வயது தான். அப்போது அவர் சாந்திநிகேதனில் கலை படிப்பை படித்துக் கொண்டிருந்தார். குருவின் அறிவுரையை ஏற்று தினநாத் பர்கவா மூன்று மாதங்களுக்கு கொல்கத்தாவில் உள்ள சரணாலயத்திற்கு தினமும் சென்றுவந்ததாகவும், அங்கு சிங்கங்களின் பாவனைகள், அவைகள் எப்படி நிற்கின்றன, எப்படி அமருகின்றன என்பதை உன்னிப்பாக கவனித்து வந்ததாகவும் கூறியுள்ளார். தினாநாத் பார்கவா வடிவமைத்த அசோக ஸ்தூபியின் அசல் கலைப்படைப்பின் பிரதி, பல ஆண்டுகளுக்குப் பிறகு 1985 ஆம் ஆண்டில் அதை முடித்ததால் இன்னும் தங்களிடம் இருப்பதாக குடும்ப உறுப்பினர்கள் கூறினர்.




சர்ச்சைக்கு பதிலளிக்க மறுப்பு:


“பர்கவாவால் வரையப்பட்ட சின்னத்தில் இருக்கும் சிங்கத்தின் வாயில் தங்க இழைகள் பூசப்பட்டுளதாகவும், அந்த சிங்கத்தின் நாக்குகள் சிறிதளவு தெரியும் என்றும், அந்த சிலையின் கீழ் சத்யமேவ ஜெயதே என்று தங்க நிறத்தில் எழுதப்பட்டிருக்கும்” என்று கூறியுள்ளனர்.
 
தற்போது நாடாளுமன்ற கட்டிடத்தின் மேல் தற்போது வைக்கப்பட்டுள்ள தேசிய சின்னம்  குறித்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக பதிலளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். “இந்த சர்ச்சைகளுக்குள் செல்ல நாங்கள் விரும்பவில்லை. ஆனால் ஒரு படத்திற்கும் அதன் சிலைக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருப்பது இயற்கையே” என்று கூறியுள்ளனர்.





பெயர் வைக்க கோரிக்கை:


மேலும், தினநாத் பர்கவாவின் கலைசேவையை நினைவு கூறும் விதமாக மத்தியப் பிரதேசத்தில் ஏதேனும் ஒரு கலைக்கூடம், இடம் அல்லது அருங்காட்சியகத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதை செய்கிறோம் என்று பல தலைவர்கள் உறுதியளித்தும் இந்த கோரிக்கை மட்டும் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது என்று பர்கவாவின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.


இந்திய தேசிய சின்னத்தை வரைந்தவரான தினநாத் பர்கவா மத்திய பிரதேச மாநிலம் பீடுலில் பிறந்து வளர்ந்தவர். இந்தூரில் வாழ்ந்து வந்த பர்கவா கடந்தந் 2016ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி தனது 89வது வயதில் காலமானார்.