அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


டெல்லியில் வேட்பு மனுவை வாங்க வந்த திக் விஜய் சிங் தனது வேட்பு மனுவை நாளை தாக்கல் செய்ய போவதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில், ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை அசோக் கெலாட் ராஜினாமா செய்ய மறுத்த நிலையில் தான் போட்டியிட போவதாக அறிவித்தார்.






மேலும், வாக்கெடுப்பு மும்முனைப் போட்டியா அல்லது இருமுனைப் போட்டியா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "வாபஸ் பெறும் தேதியான அக்டோபர் 4 வரை காத்திருங்கள்" என்று தெரிவித்தார். 


ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வியாழக்கிழமை முதல்வர் அசோக் கெலாட்டை சந்திக்க உள்ளார் . இந்த எதிர்பார்க்கப்படும் சந்திப்பின் மீது அனைவரது பார்வையும் இருந்தாலும் , காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் ராஜ்யசபா எம்.பி.யும், முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வருமான திக்விஜய் சிங் களமிறங்கியுள்ளார். 


வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடைகிறது. இதுவரை சசி தரூர் மட்டுமே போட்டியில் இருந்த நிலையில் தற்போது திக்விஜய் சிங்கும் போட்டியில் இருக்கிறார். 






ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் மீண்டும் எழுந்த போதிலும், காந்தி குடும்பத்தை சேராத ஒருவரே கட்சியின் தலைவராக வேண்டும் என்பதில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார் என தகவல் வெளியானது. 


20 ஆண்டுகளுக்கும் பிறகு நடைபெற உள்ள முதல் தேர்தலில் காந்தி குடும்பத்தை சேர்ந்த யாரும் போட்டியிடவில்லை. இச்சூழலில், பல காங்கிரஸ் தலைவர்கள், தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


தொடர் தோல்வியை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சியில், அதிரடி மாற்றங்களை மேற்கொள்ளக் கோரியும் முடிவுகளை ஒருங்கிணைந்து எடுக்க வலியுறுத்தியும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.


அதில், முக்கிய தலைவர்களான கபில் சிபல், குலாம் நபிஆசாத் ஆகியோர் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டனர். இதற்கு மத்தியில், அக்குழுவின் மற்றொரு முக்கிய தலைவர் சசி தரூர், தலைவர் தேர்தலில் போட்டியிடுவதில் அக்குழுவில் உள்ள தலைவர்களின் மத்தியில் ஒரு மித்த கருத்து நிலவவில்லை எனக் கூறப்படுகிறது.


தலைவர் தேர்தலில் போட்டியிடும் விருப்பத்தை தரூர் சோனியாவிடம் தெரிவித்துவிட்டார். அதேபோல், தற்போது மூத்த அரசியல் கட்சி தலைவரான திக்விஜய் சிங் களம் கண்டு இருப்பது காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.