கடந்த 2019ம் ஆண்டு முதன்முறையாக டிஜிட்டல் முறையிலான தனிநபர் தரவுகள் பாதுகாப்பு தொடர்பான மசோதாவை,  நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், தனி நபர்களின் தகவல்களை தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சமூக வலைதள நிறுவனங்கள் எப்படி கையாள வேண்டும் என வரையறை செய்யப்பட்டு இருந்தது.


புதிய டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதா:


ஆனால், இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால், தனி நபர்களின் தகவல்களை அரசு கண்காணிக்க வழிவகுப்பதோடு,கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற கூட்டுக்குழு, மசோதாவில் 81 திருத்தங்களுடன் 12 பரிந்துரைகளை முன்வைத்தது. இதையடுத்து, அந்த மசோதாவை திரும்பப் பெற்ற மத்திய அரசு, நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்வைத்துள்ள வரையறைக்கு உட்பட்டு புதிய மசோதா உருவாக்கப்படும் என அறிவித்தது.


இந்நிலையில், பழைய மசோதாவை வாபஸ் பெற்ற மூன்று மாதஙகளிலேயே, டிஜிட்டல் முறையிலான தனிநபர் தரவுகள் பாதுகாப்பு தொடர்பான புதிய மசோதாவை, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். ஆஸ்திரேலியா, ஐரோப்பா, சிங்கப்பூர் நாடுகளின் சட்டங்கள், அமெரிக்க சட்டத்தின் ஒரு பகுதியை ஆய்வுசெய்து, புதிய மசோதாவின் அம்சங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த  மசோதா குறித்த கருத்துகளையும், ஆலோசனைகளையும் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் எனவும், விதிகளை வகுப்பதில் மக்கள் தங்கள் உரிமைகள் மற்றும் கடமைகளை சுட்டிக்காட்ட வேண்டும் எனவும், அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி வலியுறுத்தியுள்ளார்.






புதிய மசோதாவின் முக்கிய அம்சங்கள்:


தனிநபர் தரவுகளை பயன்படுத்துவது சட்டப்பூர்வமாகவும், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நியாயமாகவும், தனிநபர்களுக்கு வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் எனவும், தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் எனபதே, மசோதாவின் முதல் இரண்டு அம்சங்களாக உள்ளன. தனிநபர்களின்  தரவுகள் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, ரூ.15 கோடி அல்லது அதன் சர்வதேச வருவாயில் 4 சதவிகிதம் அபராதமாக விதிக்க, பழைய மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை தற்போது ரூ.500 கோடியாக உயர்த்தி பரிந்துரைத்துள்ளது.


இந்த மசோதா குறித்து அடுத்த மாதம் 17ம் தேதி வரையில் பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.