வெறுப்பை தூண்டும் கருத்துகள், பொய் செய்திகள் ஆகியவை சமூகத்தில் பெரும் தாக்கங்களை உண்டாக்கி வருகிறது. அதை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பிரச்னைகளை தீர்க்கும் வகையில் மத்திய அரசு புதிய மசோதா ஒன்றை கொண்டு வர உள்ளது.


இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "இணையத்தை கடுமையாக ஒழுங்குபடுத்துவதையும், நாட்டில் புதிய இணையக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த சட்டம்" என்றார்.


புதிய மசோதா:


டிஜிட்டல் இந்தியா மசோதா குறித்து விரிவாக பேசியுள்ள அவர், "டிஜிட்டல் இந்தியா மசோதா தொடர்பான ஆலோசனைகள் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் இந்த மாதம் தொடங்கும். புதிய டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.


சமூக வலை தளங்களில் குழந்தை பாலியல் துன்புறுத்தல், மதத்தைத் தூண்டும் கருத்துகள், காப்புரிமை மீறும் செய்திகள், தவறான தகவல் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் பாதுகாப்பு பிரச்னைகளுக்கு டிஜிட்டல் இந்தியா மசோதா தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சமூக ஊடகங்களில் நாம் விரும்பாத 11 விஷயங்கள் உள்ளன. ஆபாசப் படங்கள், குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் கருத்துகள், பதிப்புரிமை மீறும் செய்திகள், தவறான செய்திகள், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரான கருத்துகள், கணினி வைரஸ், தடைசெய்யப்பட்ட ஆன்லைன் கேம்கள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களை விரும்பவில்லை.


இந்த வகையான உள்ளடக்கங்கள் ஏற்கனவே தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021இல் புதுப்பித்து சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், டிஜிட்டல் இந்தியா மசோதா அத்தகைய உள்ளடக்கத்தை வெளியிடும் தளங்களை பொறுப்பேற்க அரசாங்கத்திற்கு சட்டப்பூர்வமான அதிகாரத்தை வழங்கும்.


2014 ஆம் ஆண்டில், உலகில் டிஜிட்டல் இணைப்பு இல்லாத நாடாக நாம் இருந்தோம். டிஜிட்டல் தளத்தில் இந்தியா விரைவான மாற்றம் அடைந்துள்ளது. இன்று, நாட்டில் 85 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர். இன்று, உலகில் இணையத்தால் இணைக்கப்பட்ட நாடாக நாம் மாறியுள்ளோம். 2025ல், இந்த எண்ணிக்கை 120 கோடியாக உயரும்" என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், "முன்மொழியப்பட்ட டிஜிட்டல் இந்தியா மசோதா, இணையத்தை பாதுகாப்பாக மாற்றவும், டிஜிட்டல் குடிமகனைப் பாதுகாக்கவும் அரசாங்கத்தின் முன்முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இதைச் செயல்படுத்த, டிஜிட்டல் இந்தியா மசோதாவில் ஒரு விதி சேர்க்கப்படும், இது இந்த தளங்களின் பயனர்களின் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் நிலைநிறுத்தும்" என்றார்