உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் மதிய உணவு வேளையின் போது தலித் மாணவர்களை தனித்தனி வரிசையில் உட்கார வைத்த விவகாரத்தில் தலைமையாசிரியை மாவட்ட நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.


சாதிகளை வேரோடு அழித்துவிட வேண்டும் என்று நினைத்தாலும் எப்படியாவது துளிர்விடத்தான் செய்கிறது. பள்ளிகளில் தொடங்கி பணிபுரியும் இடம் வரை சாதியப் பாகுபாடுகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன. “சாதிகள் இல்லையடி பாப்பா“ என பாரதி கூறினாலும் சாதிகள் உள்ளதடி பாப்பா, நீ தப்பித்து எழுந்து வா பாப்பா என்று தான் சொல்லும் அளவிற்கு சாதியக் கொடுமைகள் அரங்கேறிவருகிறது. 



அப்படி ஒரு சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள கிராமப்பள்ளி ஒன்றில் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் உள்பட பல மாணவர்கள் பயின்றுவருகின்றனர். ஒவ்வொரு நாளும் மாணவர்கள் மதிய உணவு சாப்பிடும்போது தலித் சமூகத்தைச் சார்ந்த மாணவர்கள் மட்டும் தனி வரிசையில் அமரவைப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இப்பள்ளியின் தலைமையாசிரியர் எப்போதும் தாமதமாகத்தான் பள்ளிக்கு வருவார் எனவும், தனியாக வரிசையில் உட்காரவில்லை என்றால் மாணவர்களை அடிப்பார் என பெற்றோர்கள் மற்றும் அப்பள்ளியில் பயிலும் குழந்தைகள் குற்றம் சாட்டுகின்றனர். 


இப்படி பல நாள்களாக நடந்துவந்த இச்சம்பவம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் புகாரினையடுத்து இக்கிராமத்தின் தலைவர் வினய் குமார் ஜெய்ஸ்வால் சம்பந்தப்பட்டப் பள்ளிக்கு நேரில் சென்றுள்ளார். அங்கு ஆசிரியர் சரியான நேரத்திற்கு வருவதில்லை எனவும், மாணவர்களுக்கு முறையாக பாடம் எடுப்பதில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இதனையடுத்து அரசுப்பள்ளியில் தலித் மாணவர்கள் படும் துயரங்கள் குறித்து பெற்றோர்கள் மற்றும் சமூக நல அமைப்பின் மூலம் காவல்நிலையத்தில் அளித்துள்ளனர்.



இதனையடுத்து புகார் அளித்த மாணவர்களின் உறவினர்கள் மீது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதன் பின்னர் தான் இப்பிரச்சனை மாவட்ட நிர்வாகத்திடம் கொண்டு  செல்லப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், அமேதி மாவட்ட கல்வி அதிகாரி பிரச்சனைக்குரிய பள்ளிக்குச் சென்று நேரிடையாக ஆய்வு நடத்தியுள்ளார். அதில் தலைமையாசிரியை பள்ளிக்குச் சரியான நேரத்திற்கு வருவதில்லை எனவும், இவரின் உத்தரவின் பேரில்தான், மதிய உணவு வழங்கும்போது பட்டியலின மாணவர்கள் தனித்தனி வரிசையில் உட்காரவைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது இப்பிரச்சனைக்கு காரணமாக பள்ளி தலைமையாசிரியை குசும் சோனி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் பட்டியலின மற்றும் பழங்குடியின வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.