MP Senthil Kumar: உச்சநீதிமன்றத்தில் தேர்தலில் இலவசங்களை அறிவிக்க தடைக்கோரி அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த இலவசங்கள் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இன்று விசாரணையை நடத்தி வந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர் உள்பட பலரும் வாதாடி வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன் இருந்தார். அப்போது அவரை பார்த்து தலைமை நீதிபதி, “நீங்கள் இருக்கும் கட்சியை பார்த்து நாங்கள் நிறைய சொல்ல வேண்டும். இந்த வழக்கில் நீங்கள் மட்டும்தான் அறிவாளி கட்சியாக ஆஜராகியிருக்கிறீர்கள் என்று நினைக்காதீர்கள். நீங்கள் கூறுவது அனைத்திற்கும் நாங்கள் எதுவும் கூறவில்லை என்பதால், எதையும் நாங்கள் கவனிக்கவில்லை என்று நினைக்காதீர்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக, திமுக, தர்மபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் தனது டிவிட்டரில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், திமுக அறிவாளி கட்சிதான் என பொருள் படும்படியாக பதிவிட்டுள்ளார். அவரது டிவிட்டர் பதிவில், ஆம். #சமூக_நீதி ஆட்சி மூலம் இதை சாதித்து,தரவுகள் மூலம் நிரூபித்து காட்டிய கட்சி திமுக மட்டுமே. இதில் என்ன doubt My UnLords என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு பதில் அளிக்கும் விதமாக இருப்பதால் அரசியல் தளத்தில் பெரும் கவனத்தினை பெற்றுள்ளது.
ஏற்கனவே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கேள்விக்கு, தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பதில் அளிக்கும் விதமாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்திருந்தார். அதில் அவர், “நான் இந்த ரிவாரி விவாதம் தொடர்பாக மிகுந்த குழப்பத்தில் உள்ளேன். உத்தரபிரதேசம், ஹரியானா, புதுச்சேரி உள்ளிட்ட முதலமைச்சர்களின் செயல்கள் பிரதமரின் நிலைப்பாட்டிற்கு எதிராக இல்லையா?
இல்லை ஒரு அரசுக்கு ஒரு விதியா? அல்லது எதிர்க்கட்சிகளுக்கு ஒரு விதியா? அதாவது பாஜகவிற்கு ஒரு விதி, மற்ற கட்சிகளுக்கு வேறு ஒரு விதியா? அப்படி இல்லையென்றால் நான் செய்வதை செய்யாமல் நான் சொல்வதை செய் என்று உள்ளதா” எனப் பதிவிட்டுள்ளார்.
அவருடைய பதிவில் உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் புதுச்சேரி அரசுகளின் அறிவிப்பை மேற்கோள் காட்டியுள்ளார். உத்தரபிரதேசத்த்தில் 60 வயது மேல் உள்ள பெண்களுக்கு இலவசமாக பேருந்து பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 11வது மற்றும் 12வது வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் நாட்டு மாடு இனத்தை வாங்குபவர்களுக்கு இலவசமாக 25 ஆயிரம் ரூபாய் மானியமாக அளிக்கப்படும் என்று அறிவிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.