ஹரியானா மாநிலத்தின் பாஜக அரசு சிறையில் இருக்கும் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங்கிற்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. குர்மீத் ராம் ரஹிம் சிங் கடந்த 2017ஆம் ஆண்டு இரட்டை பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, ஹரியானாவின் ரோஹ்தக் சிறையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார். மேலும், கடந்த 2002ஆம் ஆண்டு, தனது மேலாளரைக் கொலை செய்த வழக்கும் அவர் மீது இருக்கிறது. 


தான் சிறையில் அடைக்கப்பட்டது முதல் தற்போது முதன்முறையாக பரோல் பெற்றாலும், குர்மீத் ராம் ரஹிம் சிங் இதுவரை நான்கு முறை furlough என்று அழைக்கப்படும் விடுப்பு பெற்று சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம், அவருக்கு மூன்று வாரங்கள் விடுப்பு வழங்கப்பட்டிருந்தது. 


பரோல் என்பது சிறைவாசியின் நன்னடத்தை காரணமாக, சிறப்புக் காரணம் ஒன்றிற்காகவோ, தேவைப்படுவதற்காகவோ தற்காலிகமாக சிறைவாசியை வெளியில் அனுப்புவதாகும். அதே வேளையில் furlough என்பது சிறைவாசிகளுக்கான குறுகிய கால இடைவெளியில் அளிக்கும் விடுப்பு ஆகும்.


 


ஹரியானாவின் சிர்சா பகுதியில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைமையிடத்தில் தனது இரண்டு பெண் சீடர்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக அந்த அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் தற்போது 20 ஆண்டுக் கால சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார். கடந்த 2017ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் பஞ்சகுலாவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அவருக்கு இந்தத் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. 


கடந்த ஆண்டு, தேரா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் கடந்த 2002ஆம் ஆண்டு நால்வருடன் சேர்ந்த அமைப்பின் மேலாளர் ரஞ்சித் சிங்கைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக அவர் மீது மேலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், கடந்த 2002ஆம் ஆண்டு செய்தியாளர் ஒருவரின் கொலை வழக்கிலும், கடந்த 2019ஆம் ஆண்டு குர்மீத் ராம் ரஹிம் சிங் உள்பட நால்வர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


தற்போது பரோலில் சிறையில் இருந்து வெளியில் வரும் குர்மீத் ராம் ரஹிம் சிங், உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்திலுள்ள பர்னவா பகுதியில் உள்ள தேரா சச்சா சவுதா ஆசிரமத்திற்குச் செல்வார் எனக் கூறப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண