பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, வடக்கு ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடர்த்தியான முதல் மிக அடர்த்தியான மூடுபனி படர்ந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) செவ்வாய்க்கிழமை காலை தெரிவித்துள்ளது.
கண்கள் தெரியவில்லை
மூடுபனி அடர்ந்து போர்த்தி இருப்பதால் பல நகரங்களில் கண்களுக்கு எதுவும் தெளிவாக தெரியவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. டெல்லியின் பாலத்தில், காலை 5:30 மணிக்கு பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி, பார்க்கமுடிந்த அளவு வெறும் 25 மீட்டர் மட்டுமே என்று ஒரு அறிக்கை கூறுகிறது. மேலும் சப்தர்ஜங் பகுதியில், 50 மீட்டருக்குத் தெரிவதாக கூறப்படுகிறது.
எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
வானிலை மையம் மேலும் அமிர்தசரஸ், கங்காநகர், பாட்டியாலா மற்றும் லக்னோ ஆகிய பகுதிகளிலும் 25 மீட்டர் பார்க்கமுடிந்த அளவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. பதிண்டாவில் இன்னும் மோசமான அடர்த்தியான மூடுபனி சூழ்ந்து இருந்த நிலையில், அங்கு பார்க்கமுடிந்த அளவு 0 ஆகக் பதிவுசெய்யப்பட்டது. இந்தோ-கங்கை சமவெளிகளில் அடுத்த சில நாட்களுக்கு அடர்ந்த மூடுபனி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் மேற்கு உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில், இன்றும் நாளையும் அடர்த்தியான மூடுபனி காரணமாக குறைந்த அளவு பார்வையே கிடைக்கும் என்று கூறி 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
விமான இயக்கத்தில் பாதிப்பா?
மோசமான பனிப்போர்வையால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து இயக்கம் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் தெருக்களில் வாகனங்கள் எச்சரிக்கையுடன் அனுமதிக்கப்பட்டன. டெல்லி விமான நிலையமும் மூடுபனி எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில், விமான நிலையத்தில் குறைந்த தெரிவுநிலை நடைமுறைகள் நடந்து வருவதாகக் கூறியது. ஆனால் இதன் மூலம் விமானங்கள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை என்றும், தற்போது அனைத்து விமான சேவைகளும் வழக்கம் போல் இயங்கி வருகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.
மூடுபனி வகைப்படுத்தல்
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி, 'மிகவும் அடர்த்தியான மூடுபனி' என்பது 0 மற்றும் 50 மீட்டருக்கு இடையில் இருக்கும் பார்வை அளவு ஆகும். 51 மற்றும் 200 மீட்டர் உள்ள மூடுபனி அடர்த்தியான மூடுபனி என்றும், 201 மற்றும் 500 மீட்டருக்குள் உள்ள மூடுபனி மிதமானது என்றும், 501 மற்றும் 1,000 மீட்டர் கொண்ட மூடுபனி ஆழமற்றது என்றும் வகைப்படுத்தப்படும்.