500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.
மேல் குறிப்பிட்டு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற நரேந்திர மோடி அரசின் 2016 ஆம் ஆண்டு முடிவுக்கு எதிரான மனுக்களை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அன்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நள்ளிரவு முதல் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக மத்திய அரசு தீர்க்கமான போரை அறிவித்து உள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், பணமதிப்பிழப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, கடந்த 2016ஆம் ஆண்டு, இந்திய ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்த பிறகே பணமதிப்பிழப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மத்திய அரசின் சார்பாக ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி தெரிவித்தார்.
இதில், மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக எழுப்பப்படும் கேள்விக்கே இடமில்லை என்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய கேள்வியை மத்திய அரசிடம் எழுப்பியிருந்தது. பணமதிப்பிழப்பு கொள்கையை இந்திய ரிசர்வ் வங்கி எதிர்த்திருந்தால், அந்த ஆட்சேபனையை மத்திய நிராகரித்திருக்குமா என மத்திய அரசு தரப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியிடப்படவிலலை, அரசிதழில் அறிவிப்பாக வெளியிடப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கோடிக்கணக்கான மக்களை மோசமாக பாதித்த இம்மாதிரியான நடவடிக்கைகள் அரசிதழில் அறிவிப்பாக வெளியிட்டிருப்பதன் மூலம் நிறைவேற்றி இருக்கக் கூடாது என மனுதாரர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததது. மத்திய அரசின் அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் மனுதாரர்கள் வாதம் முன்வைத்தனர்.
இந்த வாதத்தை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகார்ஜுனா, "இந்த நடவடிக்கை [பணமதிப்பிழப்பு] மத்திய அரசிடமிருந்து வெளியிடப்பட்டது என்று வைத்துக்கொள்வோம்.
ரிசர்வ் வங்கி, தனது ஆழ்ந்த அறிவுதளத்திலிருந்து, இப்போது அதைச் செய்வது சரியல்ல, அல்லது அதைச் செய்வதே சரியல்ல எனக் கூறி, தனது விருப்பத்தை மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தால், அப்போது என்ன நடந்திருக்கும்? அதை மத்திய அரசு ஒதுக்கித் தள்ளுமா?" என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், "இந்த கேள்வி இந்த வழக்கில் எழவே இல்லை. பணமதிப்பிழப்பு அறிவிப்பு பின்னர் நாடாளுமன்ற சட்டமாக்கப்பட்டது. நாடாளுமன்றம், அரசாங்கத்துடன் உடன்பட்டது. தவிர, இறையாண்மை கொண்ட சக்தியாக, ரிசர்வ் வங்கியுடன் உடன்படாமல் இருப்பதற்கான உரிமை மத்திய அரசுக்கு உள்ளது" என்றார்.