இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தாக்கம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 3 கோடியைத் தாண்டியுள்ளது. உருமாறிய டெல்டா வகை கொரோனாவே இந்த பாதிப்பிற்கு அதிகளவு காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இந்த நிலையில், கொரோனா மூன்றாவது அலை ஆகஸ்டு மாதத்தில் தொடங்கும் என்று ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த சூழலில், நாட்டில் டெல்டா வகை கொரோனாவை விட ஆபத்து மிகுந்த டெல்டா பிளஸ் கொரோனா வைரசின் தாக்கம் பரவத் தொடங்கியுள்ளது. நாட்டிலே முதன்முறையாக மத்திய பிரதேசம் தலைநகர் போபாலில் 65 வயது பெண்மணி ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு மகாராஷ்ட்ரா, கேரளம் மற்றும் மத்திய பிரதேசத்தில் இந்த ஆபத்து மிகுந்த டெல்டா பிளஸ் கொரோனா வைரசால் சுமார் 40 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.




நிபுணர்கள் இந்த புதிய வகை கொரோனா வைரசால் மூன்றாவது அலை வரக்கூடும் என்றும். இது திட்டமிட்டதை விட முன்கூட்டியே தனது தாக்குதலைத் தொடங்கும் என்றும் ஏற்கனவே  எச்சரிக்கை விடுத்திருந்தனர். டெல்டா பிளஸ் பரவலை கண்காணித்து வரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்த புதிய வகை மாறுபட்ட வைரஸ் கவலையின் மாறுபாடாக உள்ளது என்றும், இதனால் மாநிலங்கள் இந்த புதிய வகை கொரோனா வைரஸுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பரிசோதனை மாதிரிகள் இன்சாகோக் (INSACOG) ஆய்வகங்களுக்கு அனுப்பபப்ட்டு வருகிறது. சுகாதாரத்துறை நிபுணர்கள் இந்த புதிய வகை டெல்டா பிளஸ் வைரஸ் மனித உடலின் நோய் எதிர்ப்புசக்தியை கடுமையாக பாதிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உருமாறிய கொரோனா வைரசான டெல்டா வகை கொரோனா உலகம் முழுவதும் 80 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சூழலில், உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை உலகில் அமெரிக்கா, இங்கிலாந்து, போலந்து, போர்ச்சுக்கல், சுவிட்சர்லாந்து, ஜப்பான், நேபாளம், சீனா, இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளில் தற்போது காணப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இந்த புதிய வகையான டெல்டா பிளஸ் கொரோனா வைரசால் இதுவரை 200 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த டெல்டா பிளஸ் கொரோனா வைரசின் பாதிப்பை எச்சரிக்கும் விதமாக, இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் நமக்கு முன்னால் ஒரு கடினமான கொடுங்காலம் உள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.




டெல்டா பிளஸ் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகளின் செயல்திறனை விஞ்ஞானிகள் இன்னும் முழுமையாக பரிசோதிக்கவில்லை. ஆனால் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் முன்னாள் ஆணையர் டாக்டர் ஸ்காட் கோட்லீப், தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருப்பதாக தெரிகிறது என்று கூறியுள்ளார். இந்தியாவின் பிரபலமான வைரலாஜிஸ்ட் ஷாகித் ஜமீல் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்  தடுப்பூசி அளித்துள்ள நோய் எதிர்ப்பு சக்தியையும், முந்தைய தொற்றுநோய்களால் வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி செயல்படத்தக்க ஆற்றல் வாய்ந்தது என்று அச்சம் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் டெல்டா பிளஸ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 65 வயது பெண் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


கொரோனா வைரசின் இரண்டாம் அலை ஓய்வதற்கு முன்பாகவே டெல்டா பிளஸ் கொரோனா தொற்று பாதிப்பு தனது தாக்கத்தை தொடங்கியிருப்பது பொதுமக்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.