சுமார் 100 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் நாளை மக்களவையும், வருகிற 2-ஆம் தேதியன்று மாநிலங்களவையும் கூட உள்ளது.

Continues below advertisement

நாடாளுமன்றம் மீண்டும் கூட உள்ளது குறித்து ஏற்கனவே மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்திருந்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

50% அளவுக்கு அதிகரிக்கப்பட உள்ள தொகுதிகள்?  

இந்நிலையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் இன்றி அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீராக 50 % அளவுக்கு உயர்த்தப்பட உள்ளதாகவும், இவ்வாறு மாற்றம் செய்யப்பட உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாற்றமின்றி தொடரும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீட்டை 2029-நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அமல்படுத்தும் நோக்கத்துடன் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

மீண்டும் கூட உள்ள மழைக்காலக் கூட்டத்தொடர்

கடந்த ஜூலை-20 ஆம் தேதியன்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட்-13 ஆம் தேதியன்று ஒத்திவைக்கப்பட்டது. 100 நாட்களுக்கு மேலாக மக்களவை மற்றும் மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கூட்டத்தொடர் மீண்டும் கூட உள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் மத்திய அமைச்சர் கிரண் ரிஜஜூ அறிவித்துள்ளார்.

மசோதாக்கள் நிறைவேற்றப்படுமா?

கடந்த சிறப்புக் கூட்டத்தொடரில் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டபோது அப்போது பங்கேற்ற 528 உறுப்பினர்களில் ஆதரவாக 298 பேரும், எதிராக 230 பேரும் வாக்களித்தனர்.மசோதா வெற்றிபெற 3-ல் 2 பங்கு பெரும்பான்மைக்கு 332 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில் அதற்கும் குறைவான வாக்குகளை பெற்றதால் தோல்வியடைந்தது. இந்நிலையில் தற்போதைய சூழலில் காலியிடங்கள் போக மொத்தமாக 540 உறுப்பினர்கள் உள்ள நிலையில்  3-ல் 2 பங்கு பெரும்பான்மையுடன் வெற்றிபெற 359 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 320 ஆக உள்ள நிலையில் இம்மசோதாவிற்கு திமுக (22), சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (8) மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்த உறுப்பினர்கள் மற்றும் பெரும்பான்மை என்பது அவைக்கு வருகை புரியும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து மாறுபடும்.