Delhi : டெல்லி ரயில் நிலையில் இளம்பெண் ஒருவர் மின்கம்பத்தை பிடித்தபோது, மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியில் கனமழை


டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பிரதான சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி இருக்கிறது. காஜியாபாத், நொய்டா, யமுனா நகர் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஒருசில இடங்களில் மரங்கள் முறிந்ததால் மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. 


தொடர்ந்து மழை பெய்து வருவதால், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவையும் பாதிக்கப்பட்டது.   இந்நிலையில், இன்று அதிகாலை ஒரு சோக நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.


மின்கம்பத்தை தொட்ட இளம்பெண்


கிழக்கு டெல்லியில் உள்ள பரீத் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் ஷாக்சி அகுஜா. இவர் இன்று அதிகாலை 5.30 மணியளவில் ரயில் நிலையம் வந்திருந்தார். இவருடன் சகோதரி மாதவி சோப்ரா மற்றும் 3 குழந்தைகள் வந்து  இருந்தனர். நேற்று இரவு பெய்த மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி கிடந்தது. ரயில் நிலையத்திலும்  தண்ணீர் தேங்கி கிடந்துள்ளது.


தேங்கி கிடந்த தண்ணீரில் மிதிக்காமல் இருப்பதற்காக ஷாக்ஷி அகுஜா அருகில் இருந்த மின்கம்பத்தை பிடித்திருக்கிறார். இதில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார். அவருடன் வந்த சகோதரி மாதவி சோப்ராவும் மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்துள்ளார். இதனால் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


பரிப்போன உயிர்


உடனே மின்சாரம் தாக்கிய இருவரையும் அங்கு இருந்த பயணிகள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், அவரது சகோதரி மாதவி சோப்ராவுக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இதற்கிடையில், இளம்பெண் தொட்ட அந்த மின்கம்பத்தின் அடிப்பகுதியில் வயர் ஒன்று வெளியே தொங்கிக் கொண்டு இருக்கும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகின.


எனவே மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்ததற்கு இதுவே காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அலட்சியமாக செயல்பட்ட ஊழியர் யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும், ரயில் ஊழியர்களின் அலட்சியம் தான் இளம்பெண் உயிரிழப்பிற்கு காரணம் என்று பயணிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.


இதற்கு காரணமான ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற விபத்துக்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இந்த சம்பவம் தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.