கடந்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு மேமாதத்தில் டெல்லியில் குறைந்த அளவு வெப்பம் பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.


கடந்த சில வாரங்களாக டெல்லியில் கடுமையான அனல்காற்று வீசி வந்த நிலையில் வெளியே வரமுடியாமல் பலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர். இதற்கு முற்றிலும் எதிர்மாறாக டெல்லியின் வெப்ப நிலை குறைந்து சூறைக்காற்றுடன் பலத்தமழை பெய்து வருகிறது. இது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்த தேசிய வானிலை மையம், 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், அடுத்த சில மணி நேரங்களுக்கு பலத்த மழை பெய்யும் என்றும் கூறியிருந்தது.






காலையில் இருந்து டெல்லியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக முக்கிய இடங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதோடு, 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றால் மரங்களும் பல்வேறு இடங்களில் வேரோடு சாய்ந்திருக்கின்றன. இதனால் டெல்லியில் பல இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழை இன்னும் சில மணி நேரங்களுக்குத் தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 










மோசமான வானிலை காரணமாக பல்வேறு விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், விமான பயணத்தை மேற்கொள்ளவிருப்பவர்கள் பயண நிலையை அடிக்கடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று டெல்லி விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. டெல்லி வரும் விமானங்கள் தரையிறங்க முடியாத அளவிற்கு வானிலை மோசமாக உள்ளதால், இதுவரை சுமார் 19 விமானங்கள் ஜெய்ப்பூர் மற்றும் அருகில் உள்ள வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. பலத்த மழை காரணமாக சென்னை - டெல்லி இடையே இன்று 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பல விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக வருவது மற்றும் புறப்படுவதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தவித்து வருகின்றனர்.  




இடி, மற்றும் பலத்தக் காற்றுடன் கூடிய கனமழை டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தொடரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  குறிப்பாக குருக்ராம், க்ரேட்டர் நொய்டா, நொய்டா, காஸியாபாத், அவுரங்காபாத், பரேலி, அலிகர், ஹத்ராஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த நிலை தொடரும் என்று கூறியுள்ளது. இதனால், பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும், ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி வைக்க வேண்டும் என்றும், முடிந்தால் பயணங்களை ஒத்திப்போடவேண்டும் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.




இந்த நிலையில், கடந்த 40 ஆண்டுகளுக்குப் பிறகு மே மாதத்தின் வெப்பநிலை மிக குறைந்த அளவிற்கு பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 1982ம் ஆண்டு மே 2ம் தேதி டெல்லியின் வெப்பநிலை 15.2 டிகிரியாக பதிவாகியிருந்த நிலையில், இன்று டெல்லியின் வெப்பநிலை 17.9 டிகிரியாக பதிவாகியுள்ளது. காலை 5.30 மணிக்கு 29 டிகிரியாக இருந்த வெப்ப நிலை 6.30 மணியளவில் 19 டிகிரிக்கு குறைந்ததாகவும், பின்னர் இந்த வெப்பநிலை 17.2 அளவிற்கு குறைந்ததாகவும் ஸ்கைமெட் வெதர் என்ற நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.






வடமேற்கு இந்தியாவில் அடுத்த இருநாள்களுக்கு 3-4 டிகிரி வரை வெப்பம் குறையும் என்றும் இந்த வெப்பநிலையில் அதன் பிறகு பெரிதாக மாற்றம் இருக்காது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.