டெல்லியில் தனியார் இணைய செய்தி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில், தனிப்படை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 


தனியார் செய்தி நிறுவனத்தில் சோதனை:


நியூயார்க்  டைம்ஸில் வெளியான செய்தியில், ”சீனாவிற்கு ஆதரவான பரப்புரையை மேற்கொள்ள டெல்லி மற்றும்  தேசிய தலைநகர் எல்லையை சார்ந்து இயங்கும், இணைய செய்தி நிறுவனமான நியூஸ்கிளிக் பணம் பெற்றதாக” தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனடிப்படையில், அந்த நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்களின் இல்லங்களிலும், டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். செய்தி நிறுவனமான ANI அறிக்கையின்படி, நியூஸ்கிளிக் உடன் தொடர்புடைய 30 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.


வழக்கு விவரம்:


கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி UAPA மற்றும் IPC இன் பிற பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் நியூஸ் கிளிக் நிறுவனத்திற்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் டெல்லி காவல்துறை தொடர்ச்சியான சோதனைகளில் ஈடுபட்டுள்ளது.  யுஏபிஏ, ஐபிசியின் 153 ஏ (இரு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), ஐபிசியின் 120பி (குற்றச் சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, சிறப்புப் பிரிவு புதிய வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


பத்திரிகையாளர்கள் கருத்து:


நியூஸ் கிளிக் எழுத்தாளர் ஊர்மிலேஷின் வழக்கறிஞர் கௌரவ் யாதவ் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அலுவலகத்தை அடைந்தார். அவர் கூறுகையில், "ஊர்மிலேஷை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக அவரது மனைவி என்னிடம் தெரிவித்தார். தற்போதுக்கு வேறு எந்த விவரமும் என்னிடம் இல்லை" என கூறினார். மூத்த பத்திரிக்கையாளரான அபிசார் ஷர்மா, "டெல்லி போலீஸ் என் வீட்டிற்கு வந்தது. எனது மடிக்கணினி மற்றும் தொலைபேசியை எடுத்துச் சென்றது" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மற்றொரு பத்திரிக்கையாளரான பாஷா சிங், "இந்த போனில் இருந்து கடைசியாக ட்வீட் செய்கிறேன். டெல்லி போலீஸ் என் போனை கைப்பற்றியது " என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.


சோதனை தொடர்பாக தலைவர்கள் கருத்து:



இதுதொடர்பாக பாஜக தலைவர் துஷ்யந்த் குமார் கவுதம் பேசுகையில், "நாட்டை உடைக்க வெளிநாடுகளில் இருந்து வரும் நிதியில் செயல்படும் நியூஸ் கிளிக் அல்லது வேறு எந்த ஏஜென்சி மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நமது நாடு வளர்ச்சியடைவதை சீனா விரும்பவில்லை. தேசவிரோத அமைப்புகளை நாட்டுக்கு எதிராக பயன்படுத்த முயற்சிக்கிறது" என குற்றம்சாட்டினார்.


இதற்கிடையில், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி செவ்வாயன்று நியூஸ் கிளிக் செய்தியாளர்களின் வீடுகளில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு நடத்திய சோதனைகளை ஒரு "மீன்பிடி" முயற்சி என்று கூறினார். மேலும், வெளிநாட்டில் பத்திரிக்கையாளர்களை ஊக்குவிக்கும் மத்திய அரசு,  உள்நாட்டில் தாக்குதல் நடத்துவதை பார்ப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாகாவும் கூறினார்.


"இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்றும், வெளிநாடுகளில் பத்திரிகை சுதந்திரம் என்றும் அரசு கூறுகிறது, ஆனால் அதே மூச்சில் மீதமுள்ள சில சுயாதீன ஊடகங்களை ஒடுக்குவதற்கு அரசு நிறுவனங்களைப் பயன்படுத்துகிறது. தொலைபேசி சாதனங்கள் வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டு இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. மீண்டும் மீண்டும் மீண்டும் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு பின்னர் போலி குற்றச்சாட்டுகளை உருவாக்குவது மிகவும் குழப்பமாக உள்ளது” என முப்தி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.