இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக டெல்லி காவல்துறை இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார்களுக்கு வலு சேர்க்கும் விதமாக 25 சாட்சியங்களின் வாக்குமூலம் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.


மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு:


இந்திய தண்டனைச் சட்டம் 354, 354A, 354D ஆகிய பிரிவுகளில் கீழ் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 354 பிரிவு என்பது பெண்ணை மானபங்கம் செய்ததற்காக ஜாமீனில் வெளிவர முடியாத குற்றச்சாட்டுகளுக்காக பதிவு செய்யப்படும். இதில், தண்டனை உறுதியானால் ஐந்து ஆண்டுகள் முதல் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.


பிரிவு 354A என்பது பாலியல் துன்புறுத்தல் தொடர்பானது. இதில், ஜாமீன் வழங்கப்படும். இந்தக் குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளி மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். குறிப்பிட்ட நபரை அச்சுறுத்தும் விதமாக பின்தொடர்ந்தால் பிரிவு 354D பதிவு செய்யப்படும். இதில், ஜாமீன் வழங்கப்படலாம். குற்றம் நிரூபணமானால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.


மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக டெல்லி காவல்துறை விசாரிக்க தொடங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்களான பஜ்ரங் புனியா, வினேஷ் போகட் மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் பிரிஜ் பூஷன் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.


போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து:


ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, ஏப்ரல் 28ஆம் தேதி, டெல்லி காவல்துறை பிரிஜ் பூஷன் சிங் மீது இரண்டு வழக்குகளை பதிவு செய்தது. ஆறு மல்யுத்த வீரர்களின் புகாரின் அடிப்படையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மற்றொன்று பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.


குற்றம் நடைபெற்ற சமயத்தில் மைனராக இருந்த மல்யுத்த வீராங்கனை, பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரிஜ் பூஷன் சிங் மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்கை போலீசார் இன்று ரத்து செய்தனர். மல்யுத்த வீரரின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு முன்னதாக பதிவு செய்யப்பட்டது. 


ஆனால், விசாரணையில் மல்யுத்த வீராங்கனை அப்போது மைனர் இல்லை என்பது தெரியவந்ததால் வழக்கை ரத்து செய்ய டெல்லி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த வழக்கை, 10 காவல்துறை அதிகாரிகள் கொண்ட ஆழு குழுக்கள் விசாரித்தன. இந்த வழக்கில் மொத்தம் 125 சாட்சிகள் தங்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 25 சாட்சிகள் சிங்குக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளனர். விசாரணையின் போது புகார்தாரர்கள் மற்றும் சிங் ஆகியோரின் சாட்கள் மற்றும் குறுஞ்செய்திகள் ஆய்வு செய்யப்பட்டன.