முன்னணி தெலுங்கு நடிகரும், ஜன சேனா கட்சியின் நிறுவனருமான பவன் கல்யாண் மக்களின் குறைகளை கேட்கும் வண்ணம் யாத்திரை தொடங்கியுள்ளார்.


2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கி விட்டது. தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தங்கள் பலத்தை காட்டவும், மக்களை கவரவும் புதிய யுக்திகளை கையாளத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஆந்திராவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலும், நாடாளுமன்ற தேர்தலும் நடக்க உள்ளது. 


தற்போது அங்கு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இக்கட்சியை  எப்படியாவது வரும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் கங்கனம் கட்டிக் கொண்டு களம் கண்டுள்ளன. அந்த வகையில் மக்களின் குறைகளை கேட்க  தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் யாத்திரை தொடங்கியுள்ளார்.


இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ‘ஜன சேனா’ கட்சியை தொடங்கினார். இந்த கட்சி இப்போது ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் பாஜக அடங்கிய கூட்டணியில் உள்ளது. யாத்திரை மேற்கொள்ள வராஹி போன்ற ராணுவம் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் ஜூன் 23 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு இந்த யாத்திரை நடைபெறுகிறது. இதற்காக நேற்று குண்டூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் யாக பூஜை நடைபெற்றது. ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் இருந்து இந்த யாத்திரை தொடங்கியது. 


முன்னதாக  கிழக்கு கோதாவரி மாவட்டம் கத்திபுடி கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், ஜனசேனா கட்சி அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் அடியெடுத்து வைக்கும் என தெரிவித்திருந்தார்.  ஆந்திர அரசியலில் மக்கள் பயணம் ஒன்றும் புதிதல்ல. ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, அவரின் மகன் லோகேஷ் உள்ளிட்டோர் மக்களை தேடி பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.