நாட்டின் தலைநகரான டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமாக பதவி வகித்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நீண்ட மாதங்களாக சிறையில் இருந்து வந்தார். இவருக்கு கடந்த வாரம் உச்சநீதிமன்றம் ஜாமின் தந்தது.


புதிய முதலமைச்சர் யார்?


ஜாமினில் வெளியில் வந்த அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதையடுத்து, டெல்லியின் புதிய முதலமைச்சர் யார்? என்ற கேள்வி இப்போது நாடு முழுவதும் எழுந்துள்ளது.


இந்த சூழலில், டெல்லியின் புதிய முதலமைச்சர் யார் என்பதைத் தேர்வு செய்வதற்காக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 11.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு டெல்லியின் புதிய முதலமைச்சர் யார்? என்பது அறிவிக்கப்பட உள்ளது.

போட்டியில் 5 பேர்:


அக்கட்சியின் முக்கிய தலைவர்களான சத்யேந்திர ஜெயின், மணீஷ் சிசோடியா ஏற்கனவே இந்த வழக்கில் கைதாகி சிறை சென்றதால் அவர்கள் முதலமைச்சர் போட்டியில் இல்லை.


தற்போது முதலமைச்சருக்கான போட்டியில் அதிஷி, சௌரப் பரத்வாஜ், ராகவ் சட்டா, கைலாஷ் கெஹ்லோட் மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இவர்களில்  43 வயதான அதிஷியே கெஜ்ரிவாலின் முதன்மைத் தேர்வாக இருப்பார் என்று கருதப்படுகிறது. டெல்லி மாநில கல்வி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகிக்கும் இவர் கல்காஜி தொகுதி எம்..எல்.ஏ. ஆவார். அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபோது சுதந்திர தினத்தில் தேசிய கொடி ஏற்றிய பெருமையும் இவருக்குத்தான் உண்டு. அரவிந்த் கெஜ்ரிவாலின் மிகுந்த நம்பிக்கைக்குரியவர் என்பதால் அதிஷிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


அதிஷி - சௌரப்:


கைலாஷ் தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் செளரப் பரத்வாஜூம் இந்த போட்டியில் தீவிரமாக உள்ளார். 44 வயதான இவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதன்முதலில் வெறும் 49 நாட்கள் ஆட்சி செய்தபோதும் அவருடைய அமைச்சரவையில் இடம்வகித்தவர். அதிஷியை போலவே இவரும் அரவிந்த் கெஜ்ரிவாலின் நம்பிக்கைக்குரியவர்.


பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிப்பதில் முக்கிய பங்காற்றியவர் இளம் தலைவரான ராகவ் சதா. எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர் தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக பொறுப்பு வகித்து வருகிறார். பிரபல பாலிவுட் நடிகை பர்னிதி சோப்ராவின் கணவர் ஆவார். இவரும் முதலமைச்சருக்கான போட்டியில் உள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் மனைவியா?


ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், டெல்லி நிதியமைச்சருமான கைலாஷ் முதலமைச்சர் ஆவதற்கும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. நீண்ட அனுபவம் கொண்ட இவர் உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆவார். இறுதியாக, ஆம் ஆத்மியின் முகங்களில் ஒன்றாக கருதப்படும் சஞ்சய்சிங்கும் முதலமைச்சர் போட்டியில் உள்ளார். அக்கட்சியில் தேசிய செயற்குழு மற்றும் அரசியல் விவகாரக் குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.


இவர்கள் 5 பேர் மட்டுமின்றி அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் முதலமைச்சர் ஆவதற்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.