பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள், வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர் முயற்சிகளை எடுத்து வரும் நிலையிலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில், டெல்லியில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
தன்னுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணை அவரது காதலனே கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறும்போது, "அப்தாப் அமீன் பூனவல்லா என்பவருக்கும் அவரது லிவ்-இன் காதலி ஷ்ரத்தாவுக்கும் மே 18 சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு, ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், அவர் தனது உடலை 35 துண்டுகளாக வெட்டி அவற்றை வைக்க குளிர்சாதன பெட்டியை வாங்கி உள்ளார்.
அடுத்த 18 நாட்களுக்கு டெல்லியைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் வெட்டப்பட்ட உடல் பாகங்களை எறிந்துள்ளார். தினமும் அதிகாலை 2 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி பல்வேறு இடங்களுக்கு சென்று உடல் பாகங்களை அப்புறப்படுத்தி உள்ளார். 26 வயதான ஷ்ரத்தா மும்பையில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கான கால் சென்டரில் பணிபுரிந்து வந்துள்ளார்.
அங்கு அவர் பூனாவல்லாவை சந்தித்துள்ளார். இருவரும் டேட்டிங் செய்ய ஆரம்பித்து ஒரே வீட்டுக்கு குடியேறினர். அவர்களது உறவுக்கு அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்காததால் இருவரும் அங்கிருந்து தப்பித்து டெல்லிக்கு சென்றனர். அவர்கள் மெஹ்ராலியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசிக்கத் தொடங்கினர்.
இதை தொடர்ந்து, ஷ்ரத்தா தனது குடும்பத்தினரின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதை நிறுத்திவிட்டார். நவம்பர் 8 ஆம் தேதி, அவரது தந்தை விகாஸ் மதன் தனது மகளைப் பார்க்க டெல்லி சென்றார். அவர்கள் வசித்த ஃபிளாட்டை அடைந்தபோது, அது பூட்டப்பட்டிருந்தது. அவர் மெஹ்ராலி காவல்துறையை அணுகி தனது மகள் கடத்தப்பட்டதாக புகார் அளித்தார்.
அவரது புகாரின் பேரில், பூனவல்லாவை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். விசாரணையில், ஷ்ரத்தா பூனவல்லாவை திருமணம் செய்து கொள்ள விரும்பி உள்ளார். ஆனால், அவர் மறுத்துள்ளார். இதனால், இருவரும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டனர். போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ஷ்ரத்தா உடலை தேடி வருகின்றனர்" என தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கை உறுதி செய்கிறது. குறிப்பாக, இதில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில் நாட்டிலேயே முதல் இடத்தில் டெல்லி உள்ளது.
டெல்லியை அடுத்து மும்பையில் 5,543 குற்ற வழக்குகளும் பெங்களூருவில் 3,127 வழக்குகளும் பதிவாகி உள்ளன. 19 நகரங்களில் நடந்த மொத்த குற்றங்களில் மும்பை மற்றும் பெங்களூருவில் முறையே 12.76 சதவீதம் மற்றும் 7.2 சதவீதம் பதிவாகியுள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டு, 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பிற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில், கடத்தல் (3948), கணவர்களால் கொடுமைப்படுத்துதல் (4674) மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை (833) ஆகிய பிரிவுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கையில் டெல்லி அதிக எண்ணிக்கையில் உள்ளது.