டெல்லியில் அரங்கேறிய கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணை அவரது காதலனே கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி அப்புறப்படுத்திய சம்பவம் அனைவரின் மனதிலும் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


35 துண்டுகளாக வெட்டிக் கொலை :


அப்தாப் அமீன் பூனவல்லா என்பவருக்கும் அவரது லிவ்-இன் காதலி ஷ்ரத்தாவுக்கும் கடந்த மே 18ஆம் தேதி சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு, ஷ்ரத்தாவின் கழுத்தை நெரித்து அவர் கொலை செய்துள்ளார். பின்னர், அவரின் உடலை 35 துண்டுகளாக வெட்டி அவற்றை வைக்க குளிர்சாதன பெட்டியை வாங்கி உள்ளார். 


வேறு யாருக்கும் தெரிந்து விடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு உடல் பாகத்தையும் ஒவ்வொரு நாள் இரவு எடுத்து சென்று காட்டில் எறிந்துள்ளார். இதற்காக, தினமும் அதிகாலை 2 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி உடல் பாகங்களை அப்புறப்படுத்தி உள்ளார்.


 






இந்த கொலை சம்பவம் பற்றி நாள்தோறும் அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தற்போது ஒரு சிசிடிவி காட்சி வெளியாக அனைவரையும் பதற வைத்துள்ளது. அதில், அதிகாலை அப்தான் தனது வீட்டின் வெளியே ஒரு பையை தூக்கி செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி கடந்த மாதம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


சி.சி.டி.வி. காட்சிகள்: 


கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தாவின் உடல் உறுப்புகளை கொண்ட பையை எடுத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது. சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். கடந்த அக்டோபர் 18ஆம் தேதி அன்று இந்த காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூரமான கொலை வழக்கில் வெளிவந்துள்ள முதல் காட்சி சிசிடிவி காட்சி இதுவாகும்.


அந்த காட்சியில் இருள் சூழ்ந்துள்ளது. எதுவும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், யாரோ ஒருவர் முதுகில் பை சுமந்தபடி கைகளில் ஒரு அட்டைப்பெட்டியுடன் தெருவில் நடந்து செல்வதை காணலாம். அவரது முகம் தெளிவாக தெரியவில்லை. ஆனால், அது அப்தாப் என்று போலீசார் கூறுகின்றனர்.


கொடூர கொலை:


முன்னதாக, இன்று அதிகாலை, அப்தாப்பின் குடியிருப்பில் இருந்து கனமான கூர்மையான வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கருவிகளை டெல்லி போலீஸார் மீட்டனர். அவை ஷ்ரத்தா வாக்கரின் உடலை வெட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர். கடுமையான விசாரணைக்குப் பிறகு அப்தாப் உண்மையை சொல்ல தொடங்கி உள்ளார். 


அவரது சத்தர்பூர் குடியிருப்பில் இருந்து முக்கிய ஆதாரங்களை காவல்துறை மீட்டு வருகின்றனர். அப்தாபின் குருகிராம் பணியிடத்தில் இருந்து நேற்று கருப்பு பாலிதீன் பையையும் போலீசார் மீட்டனர். ஷ்ரத்தாவும் அப்தாப்பும் மே மாதம் மும்பையில் இருந்து டெல்லிக்கு குடிபெயர்ந்திருக்கின்றனர்.


குடிபெயர்ந்த நான்கே நாட்களில், வீட்டு செலவு உள்ளிட்ட பிரச்னைகலால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அவர், ஷர்த்தாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்லார். பின்னர், உடலை 35 துண்டுகளாக நறுக்கி குளிர்சாதன பெட்டியில் வைத்து காட்டிற்கு கொண்டு சென்று அப்புறப்படுத்தி இருக்கிறார்.