Delhi murder case: டெல்லியில் அரங்கேறிய கொலை சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. தன்னுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணை அவரது காதலனே கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி அப்புறப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


இந்நிலையில், சிறப்பு விசாரணைக்காக குற்றம்சாட்டப்பட்டவரான ஆப்தாப் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அப்போது, அவரின் காவலை மேலும் நான்கு நாள்களுக்கு நீட்டித்து சாகேத் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரின், காவல் இன்றுடன் நிறைவடையவிருந்தது.


கொலை செய்தது ஏன்?


முன்னதாக, விசாரணையின்போது பல முக்கிய தகவல்களை ஆப்தாப் நீதிமன்றத்தில் பகிர்ந்தார். ஷர்த்தாவை கொலை செய்தது ஏன்? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் இதுநாள் வரை வெளியான தகவல்களில் இருந்து சற்ற மாறுபட்டதாக அமைந்துள்ளது. 


பெரும் கோபத்தில் இருந்ததால் சற்றும் யோசிக்காமல் கொலை செய்துவிட்டதாக ஆப்தாப் வாக்குமூலம் அளித்துள்ளார். தன்னை பற்றி தெரிவித்த தகவல்களில் முழு உண்மை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். விரிவாக பேசிய அவர், "காவல்துறைக்கு ஒத்துழைத்து, உடல் உறுப்புகளை வீசிய இடத்தின் வரைபடத்தையும் கொடுத்துள்ளேன். வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் வழங்குவதாக உறுதி அளிக்கிறேன். ஆனால், சம்பவம் நடந்து நீண்ட நாள்கள் ஆகி உள்ளதால் பல விஷயங்களை நினைவுபடுத்த முடியவில்லை" என்றார்.


விசாரணை:


ஆப்தாப் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் அவினாஷ், "உடல் பாகங்கள் வீசப்பட்ட குளத்தின் வரைபடத்தை ஆப்தாப்பிடமிருந்து பெற்றதாகவும் மேலும் விசாரணைக்கு அவரை அங்கு அழைத்து செல்ல வேண்டும் என்றும் கூறி காவலை நீட்டிக்க விசாரணை அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார்.  


காவல்துறைக்கு ஒத்துழைப்பதாக ஆப்தாப் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளார். காவல்துறையும் தன்னை நன்றாக நடத்துவதாகவும் நீதிமன்றத்தில் ஆப்தாப் கூறி உள்ளார். காவல்துறையை ஆப்தாப் தவறாக வழிநடத்தவோ அல்லது பொய் சொல்லவோ இல்லை. அவரின் கருத்துகளையும் போலீசார் நீதிமன்றத்தில் எதிர்க்கவில்லை" என்றார்.


விசாரணையின் போது, ​​குருகிராமில் உள்ள கட்டத்தின் புதர்களில் ஷ்ரத்தாவின் உடலை வெட்டப் பயன்படுத்திய ரம்பம் மற்றும் பிளேட்டை வீசியதாக ஆப்தாப் கூறியதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. டெல்லி போலீஸ் குழு அந்த புதர்களில் இரண்டு முறை சோதனை செய்தது. தெற்கு டெல்லியின் மெஹ்ராலியில் உள்ள 100 அடி சாலையில் இறைச்சி வெட்டும் இயந்திரத்தை ஆப்தாப் குப்பைத் தொட்டியில் வீசி உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


துண்டு, துண்டாக வெட்ட பயன்படுத்திய ரம்பம்:


முதல் நாள் விசாரணைக்குப் பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை, குருகிராமில் உள்ள புதர்களில் இருந்து சில ஆதாரங்களை டெல்லி போலீஸார் சேகரித்தனர், அவை மத்திய தடய அறிவியல் ஆய்வகத்திற்கு விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளன.


விசாரணையின் இரண்டாவது நாளான கடந்த சனிக்கிழமை, டெல்லி போலீசார் மெட்டல் டிடெக்டர்களுடன் குருகிராமுக்கு சென்றுள்ளனர். ஆனால், எந்த ஆதரமும் இன்றி அவர்கல் வெறுங்கையுடன் திரும்பினர். ஆப்தாப் வீட்டில் இருந்து 250 மீட்டர் தொலைவில் உள்ள கடைக்கு ஆப்தாப்பை அழைத்துச் சென்றனர். அங்குதான், ஷர்த்தாவை துண்டு துண்டாக வெட்ட பயன்படுத்த ரம்பத்தை வாங்கியுள்ளார்.