ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் மசாஜ் செய்ய தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


டெல்லியில் உள்ள ஸ்பாக்களிலும் மசாஜ் சென்டர்களிலும் ஒரு பாலினத்தவர் வேறொரு பாலினத்தவருக்கு மசாஜ் செய்ய தடை விதிக்கக் கோரி அனுஜ் மல்ஹோத்ரா என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.


சட்டவிரோதமாக இயங்குகிறதா மசாஜ் சென்டர்கள்?


ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் கேமரா பொருத்தப்பட்டு அவற்றை பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த பதிவுகளை டெல்லி பெண்கள் ஆணையத்திடம் பகிர வேண்டும் என்றும் அனுஜ் மல்ஹோத்ரா கோரிக்கை விடுத்தார்.


கடந்த 2021ஆம் ஆண்டு, ஸ்பா/மசாஜ் மையங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லி அரசு வெளியிட்டது. ஆனால், இந்த வழிகாட்டுதல்களை மீறி பூட்டிய அறைகளில் மசாஜ் செய்யப்படுவதாகவும் ஒரு பாலினத்தவர் வேறொரு பாலினத்தவருக்கு மசாஜ் செய்வதால் சட்டவிரோதமான வகையில் பாலியல் தொழில் நடைபெறுவதாகவும் அனுஜ் மல்ஹோத்ரா மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


இதையும் படிக்க: "மதரஸா சட்டம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது" உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!


கரோல் பாக் பகுதியில் சட்டவிரோத ஸ்பாக்கள் இயங்குவதாகவும் இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும் ஆனால், புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அனுஜ் மல்ஹோத்ரா குற்றஞ்சாட்டினார்.


டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி:


இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி மன்மீத் சிங் அரோர ஆகியோர் அடங்கிய அமர்வு, அனுஜ் மல்ஹோத்ராவின் பொது நல வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த விவகாரத்தை ஒரு நீதிபதி அடங்கிய அமர்வு ஏற்கனவே விசாரித்து வருவதாக கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.


கடந்த 2021ஆம் ஆண்டு, ஒரு நீதிபதி அடங்கிய டெல்லி உயர் நீதிமன்ற அமர்வு, இந்த விவகாரத்தில் டெல்லி மாநகராட்சிக்கும் டெல்லி காவல் துறைக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. சோதனை நடத்தி உரிமம் இல்லாமல் இயங்கும் ஸ்பாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.


அனைத்து உரிமம் பெற்ற ஸ்பாக்களையும் ஆய்வு செய்து, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதையும் படிக்க: Rahul Gandhi Assets: சொந்தமாக வீடும் இல்ல காரும் இல்ல.. ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு என்ன? முழு லிஸ்ட் இதோ