சிறு வயதில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஒரு நுரையீரலை இழந்த செவிலியர் ஒருவர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய சம்பவம் இந்திய தேசத்திற்கு புத்துணர்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 39 வயதாகும் பிரஃபுலித் பீட்டர். திகம்கர்க் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கொரோனா வார்டில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவருக்கு சில நாட்களுக்கு முன்னதாக கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
நுரையீரல் மற்றும் மூச்சு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் கொண்டவர்களுக்கு கொரோனா ஆபத்து அதிகம் என்பதால் பிரஃபுலித் பீட்டரின் உடல்நிலை குறித்து அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் கவலையடத் தொடங்கினர்.
இதுகுறித்து அவர் செய்தி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "சிறு வயதில் ஏற்பட்ட விபத்து காரணமாக நுரையீரல் ஒன்று அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இருப்பினும், 2014 ஆம் ஆண்டில் வேறு சில காரணங்களுக்காக மார்பக எக்ஸ்ரே மேற்கொண்டேன். அப்போது தான் நுரையீரல் ஒன்று அகற்றப்பட்ட விசயம் தெரிய வந்தது" என்றார்.
மேலும், "திகம்கர்க் மருத்துவமனையில் வீடு திரும்பிய பிறகு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டேன். வீட்டில் தொடர்ந்து பிராணயாம யோகா, சுவாசப் பயிற்சிகள், பலூன் உடற்பயிற்சிகள் போன்றவைகளை தொடர்ந்து மேற்கொண்டேன்" என்று தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டதாக தெரிவித்த அவர், கொரோனா நோய்த் தொற்று பாதிப்புகளை தைரியாமாக எதிர் கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கொரோனா பாதிப்புகள்:
பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் லேசானவையே (81%). 15% பேருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது மற்றும் 5% பேருக்கு தீவிர கண்காணிப்பு தேவைப்படுகிறது. அதாவது, பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானோருக்கு மருத்துவமனை அனுமதி கூட தேவையில்லை.
இருப்பினும், தற்போது காணப்படும் கொரோனா இரண்டாவது அலை எதிர்பாராத மரணங்களை ஏற்படுத்தி வருகிறது. எந்தவித இணை நோய்கள் இல்லாதவர்கள் கூட அதிகமாக பாதிப்படைந்து வருகின்றனர்.
மூச்சு விட முடியாமை தான் தான் பெரும்பாலான கொரோனா மரணங்களுக்கு காரணமாக அமைகிறது. மனித நுரையீரல்களை நேரடியாக தாக்கும் சார்ஸ் - கோவ்- 2 வைரஸ், நுரையீரலுக்குள் அதிகப்படியான திரவத்தை கசிய விடுகிறது. இதன் காரணமாக, மூச்சு விடுதல் பாதிக்கப்பட்டு மரணம் ஏற்படுகிறது.
கொரோனா என்பது வாழ்நாள் பாதிப்பு:
தற்போது, கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய பலருக்கு, பல அங்கங்கள் செயலழிப்பு (Multi Organ Failure) நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து நாட்டில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 3ல் ஒருவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே, அவர்களிடத்தில் இருந்த இதய நோய்கள் , ரத்த அழுத்தம் , நீரிழிவு போன்ற நோய்கள் தீவிரமடைந்து உறுப்புகள் செயலழிக்கும் விகிதம் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
எனவே, கொரோனாவுக்கு எதிரான போர் என்பது தடுப்பூசி எடுத்துக் கொள்வதோடு நின்றுவிடாமல், செவலியர் பிரஃபுலித் பீட்டர்-ஐ போல் தொடர்ச்சியான போராடங்களை முன்னெடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளும் வரும் நிதியாண்டில் இருந்து சுகாதாரத் துறைக்கு போதிய நிதியை ஒதுக்கி நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்த முன்வர வேண்டும்.