டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் திருமண உறவில் நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமையைக் குற்றமாக்கும் சட்டம் தொடர்பான விவாதத்தின் போது முன்வைக்கப்பட்ட கருத்துகள் எதிர்ப்புகளைப் பெற்றுள்ளன. இந்த வழக்கில் உத்தரவிட்ட நீதிபதிகள் ராஜீவ் ஷேக்தெர், ஹரி ஷங்கர் ஆகியோர் வெவ்வேறு கருத்துகளைக் கொண்டுள்ளதும் இந்த விவகாரத்தில் சர்ச்சையாகியுள்ளது. 


திருமண உறவில் பாலியல் வன்கொடுமையைக் குற்றமாக்குவதற்கு ஆதரவு அளிப்பதாக நீதிபதி ராஜீவ் ஷேக்தெர் கூறியிருந்த நிலையில், மற்றொரு நீதிபதியான ஹரி ஷங்கர் இந்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்க மறுத்துள்ளார். 



எனினும், இந்த விசாரணையின் போது நீதிபதி ஹரி ஷங்கர் முன்வைத்துள்ள கருத்து ஒன்று சர்ச்சையாகியுள்ளது. `தன் மனைவிக்கு விருப்பம் இல்லையென்ற போதும், சில நேரங்களில் கணவர் அவரைத் தன்னுடன் பாலுறவு கொள்ள வற்புறுத்துவது உண்டு. சற்றே பணிவாகவே கேட்கிறேன்.. இந்த அனுபவமும், அந்நியர் ஒருவரால் வன்கொடுமை செய்யப்படுவதும் ஒன்றா?’ என நீதிபதி ஹரி ஷங்கர் கேள்வி எழுப்பியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அரசியல்வாதிகளும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். 



சிவ சேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், `இதனைப் பணிவாகவும் சொல்லலாம்.. பெரும்பாலான பெண்கள் மீதான அதிகாரத்தோடும் சொல்லலாம் மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே.. ஒரு அந்நியரோ, கணவரோ, ஒரு பெண் மீதோ, தனது மனைவி மீதோ தன்னைத் தானே வற்புறுத்தி பாலியல் உறவு கொண்டால் எழும் கோபம், அவமரியாதை, அத்துமீறல் ஆகியவற்றின் அனுபவங்கள் அனைத்தும் ஒன்றே.. உங்களைச் சுற்றியுள்ள பெண்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். நன்றி’ எனக் கூறியுள்ளார். 






இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ஜெய்வீர் ஷெர்கில், `நீதிபதி ஹரி ஷங்கர் திருமண உறவில் பாலியல் வன்கொடுமையைக் குற்றமாக கருதுவதற்கு மறுத்துள்ளதை எதிர்க்கிறேன். `நோ’ சொல்லும் உரிமை, தன் உடலின் மீதான தன் உரிமையை நிலைநாட்டும் உரிமை, அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 21ஆம் வழங்கப்பட்டுள்ள மானத்தோடு வாழ்வதற்கான உரிமை ஆகியவை திருமணம் என்னும் நிறுவனத்தை விட மிகப் பெரியது. உச்ச நீதிமன்றம் நீதி வழங்கும் என நம்புகிறேன்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.