அமலாக்கத்துறை மூலம் பாஜக அரசு, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்துள்ளது. இதில் அதிகம் நெருக்கடிக்கு உள்ளானது ஆம் ஆத்மி கட்சிதான்.


பண மோசடி வழக்கில் அக்கட்சியின் மூத்த தலைவர் சத்யேந்தர் ஜெயின், கடந்தாண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். இவர், டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர். இதை தொடர்ந்து, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். ஆம் ஆத்மி கட்சியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக இருந்தவர் மணிஷ் சிசோடியாதான். 


ஆம் ஆத்மி கட்சிக்கு தொடர் நெருக்கடி:


இச்சூழலில், அதே வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அவரை கைது செய்தனர். பின்னர், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டது.


இந்த நிலையில், தனது கைதை எதிர்த்தும் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு தடை விதிக்கக் கோரியும் சஞ்சய் சிங், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவர்ண காந்த சர்மா, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


வழக்கு விசாரணையின்போது, இது அரசியல் நோக்குடன் தொடரப்பட்ட வழக்கு என சஞ்சய் சிங் சார்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி சுவர்ண காந்த சர்மா, "நாட்டின் முதன்மையான புலனாய்வு அமைப்பாக அமலாக்கத்துறை உள்ளது. வைக்கப்பட்ட வாதத்தை நிரூபிக்கும் ஆவணங்கள் இல்லாத நிலையில், இந்த விவாதத்தின் ஒரு பகுதியாக நீதிமன்றம் இருக்க முடியாது.


"விசாரணை அமைப்புக்கு அரசியல் உள்நோக்கம் கற்பிப்பதை நீதிமன்றம் ஏற்காது"


இத்தகைய தாக்கங்கள், நீதிமன்றத்தை ஒன்றும் செய்துவிடாது. உறுதிமொழிக்கு மட்டுமே கட்டுப்படுகிறது. சஞ்சய் சிங் ஒரு அரசியல் பிரமுகராக இருந்தாலும், கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு சமமான நிலையில் அவர் வைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு நபருக்கும் தங்களின் இமேஜை பாதுகாக்க உரிமை உள்ளது. 


இருப்பினும், அந்த உரிமையை நிலைநிறுத்துவது குற்றத்தை விசாரிக்கும் அரசின் உரிமையின் வழியில் வந்துவிடக் கூடாது. இந்தக் கட்டத்தில் எந்த ஆதாரமும் தரப்படாத நிலையில், விசாரணை அமைப்புக்கு (ED) அரசியல் உள்நோக்கம் கற்பிப்பதை இந்த நீதிமன்றம் ஏற்காது" என்றார்.


ஒரு தொழிலதிபர் சஞ்சய் சிங்குக்கு 3 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் டெல்லி அரசின் மதுபான கொள்கைக்காக அவருக்கு இந்த பணம் தரப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதிட்டது. இந்த வழக்கில் அப்ரூவராக மாறிய டெல்லி தொழிலதிபர் தினேஷ் அரோராவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த குற்றச்சாட்டை முன்வைத்தது.


சஞ்சய் சிங்கின் வீட்டில் இருந்து ஆதாரங்களை கைப்பற்றியுள்ளதாகவும் இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் அமலாக்கத்துறை தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டுக்கும் அவருக்கும் நேரடி தொடர்பு இருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.