Mahua Moitra: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக் கட்டாக பணம் எடுக்கப்பட்டது தொடர்பாக, மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ராவின் பேச்சு இணையத்தில் வைரலாகியுள்ளது.
நிதியமைச்சருக்கு மஹுவா கேள்வி
மக்களவையில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, “ நிதியமைச்சர் மேடம் மத்திய நேரடி வரிகள் வாரியம் உங்கள் கையில் இருக்கிறது. வெளிப்படையான வரிவிதிப்பு மூலம் இந்தியாவின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான இயந்திரம் அது. ஆனால் அதை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போல் மாற்றி பயன்படுத்தாதீர்கள். அமலாக்கத்துறையால் தொடரப்பட்ட 1,193 வழக்குகளில் 2 குற்றங்கள் மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளன. அமலாக்கத்துறையின் 97% வழக்குகள் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்டவை. தற்போது என்ன நடக்கிறது என்பதே தெரியாத ஒரு ஆட்சியில் இருக்கிறோம்.
”வரி விதிப்பில் கவனம் இல்லை”
நிதி மசோதா வரி விதிப்பில் கவனம் செலுத்தவில்லை. வரிவிதிப்பு மூலம் கண்காணிப்பதற்கான அதிகாரங்களை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. அரசுக்கு தற்போது இ-மெயில்கள், சோசியல் மீடியா கணக்குகள், தனிப்பட்ட உரையாடல்களை பார்க்கும் உரிமை கிடைத்துள்ளது. நிதித்துறை இந்த டேட்டாக்களை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை உள்ளிட்டவற்றிற்கு கொடுக்கிறது. நாட்டின் 97% பேருக்கு வரிவிதிப்பில் இருந்து விலக்கு கிடைத்தால், இதனை சரிசெய்யப் போவது யார்? மீதமுள்ள 3% பேர் தான் உண்மையிலேயே வரி கட்டுகின்றனர். ( பல இடங்களில் மஹுவா மொய்த்ராவின் குற்றச்சாட்டு தொடர்பான பேச்சுகள், ஒளிபரப்பின் போதே நறுக்கப்பட்டது. அதோடு அவை குறிப்பில் இருந்தும் நீக்கப்பட்டன).
”உளவு பார்க்கும் அரசு”
இங்கே யார் உழைத்து கொண்டிருப்பது? இங்கே சேவை துறையை யார் கண்டுகொள்வது. இதனை விட்டுவிட்டு, சந்தேகம் என்ற பெயரில் உளவு பார்க்கும் வேலையை அரசு செய்து கொண்டிருக்கிறது. புதிய வருமான வரி சட்டம் மூலம் 10 அரசு நிறுவனங்களுக்கு தரவுகள் அனுப்பி வைக்கப்படுகிறது. தங்களுடைய பணத்தை வரியாக கொடுக்கும் மக்களுக்கு அரசு கொடுக்கும் மரியாதை இதுதானா? முதலாளித்துவம் மற்றும் அவர்கள் சட்டவரம்புகளுக்கு உட்படுவது தொடர்பாக அமெரிக்க ஊடகங்கள் கேட்ட போது, வாசுதேச குடும்பகம் பற்றி எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விவகாரம்:
தற்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு பிரச்னை தொடர்பாக நான் பேச விரும்புகிறேன். டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த விவகாரத்தின் உண்மைத்தன்மை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் மீடியாக்கள் அனைத்து நீதிபதிகள் நியமனம் மற்றும் அதில் அரசின் பங்கு தொடர்பாக விவாதித்துக் கொண்டிருக்கின்றன. சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் மீடியாக்கள் அனைத்தும் பெண் ஒருவரை வில்லியாக சித்தரித்ததை பார்த்தோம். எனக்கும் இதே தான் நடந்தது.
">
”கொலிஜியத்திற்கு முடிவு காலம்”
தற்போது மீடியாக்கள் நீதித்துறையையே அரசுக்கு அடிபணிய வைப்பதை பார்க்க முடிகிறது. பெயர் குறிப்பிட முடியாத ஒருவர் பக்கத்து அவைக்கு தலைமை தாங்கி கொண்டிருக்கிறார். கொலீஜியம் சிஸ்டத்தை ஒழிப்பது தொடர்பாக ஏற்கனவே பேசிவிட்டார். நான் சொல்வதை குறித்து வைத்து கொள்ளுங்கள். தேர்தல் ஆணைய நியமனங்களில் அரசு நுழைந்ததை போல், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்திலும் இதே மாதிரியான ஒன்றை கொண்டு வருவதுதான் மீடியாக்களின் திட்டம்.
”நீதித்துறையின் சுதந்திரம்”
கொலீஜியம் சிஸ்டத்தை நீக்கிவிட்டு அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதுதான் இலக்கு. நீதித்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காவிட்டால் அதற்கு எவ்வளவு பணம் ஒதுக்கினால் எந்த பயனும் இருக்காது. இதுபற்றி விவாதிக்க மக்களவை உறுப்பினர்களுக்கு அனுமதி கிடைக்க வேண்டும். அரசின் பொருளாதார நடவடிக்கைகளில் குறைகள் இருப்பதற்கு நிதி மசோதா ஒரு சான்று. ஏழைகளை ஓரங்கட்டிவிட்டு உருவாக்கப்பட்டுள்ள நிதி மசோதாவை நான் எதிர்க்கிறேன். இது அரசிற்கு கட்டுப்பாடுகள் இல்லாத அதிகாரங்களை வழங்குகிறது. இந்தியா இன்னும் சிறப்பாக இருப்பதற்கு தகுதியானது” என மஹுவா மொய்த்ரா மக்களவையில் அனல் பறக்கச் செய்தார்.