ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்து முடிவெடுக்க, மத்திய அரசுக்கு அலகாபாத் நீதிமன்றம் 4 வாரம் கெடு விதித்துள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தி ஒரு பிரிட்டன் குடிமகன் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில், மத்திய அரசுக்கு 4 வாரங்கள் அவகாசம் வழங்கி, அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராகுல் காந்தி குடியுரிமை சர்ச்சை குறித்த வழக்கின் பின்னணி
காங்கிரஸ் மூத்த தலைவரும், ரேபரேலி தொகுதி எம்.பி-யுமான ராகுல் காந்தி, சட்டவிரோதமாக இரட்டை குடியுரிமை வைத்திருப்பதாக, கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக பிரமுகர் என நம்பப்படும் வழக்கறிஞரான விக்னேஷ் ஷிஷிர் மற்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த விவகாரத்தில், ராகுல் காந்தி பிரிட்டன் குடிமகன் தான் என்பதற்கு, பிரிட்டன் அரசிடமிருந்தே பெறப்பட்ட இமெயில் சான்று உள்ளதாக விக்னேஷ் ஷிஷிர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், 2003-ல் தொடங்கப்பட்டு, 6 வருடங்களில் மூடப்பட்ட பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் ஆவணங்களில், ராகுல் காந்தி இங்கிலாந்து குடிமகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ராகுல் காந்தியின் பிரிட்டிஷ் குடியுரிமை குறித்து தெளிவுபடுத்துமாறு மத்திய அரசுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும், அதன் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், ராகுல் காந்தி தரப்பும் இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
மத்திய அரசுக்கு கெடு விதித்து நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்ற நிலையில், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் 8 வார காலம் அவகாசம் கோரினார்.
ஆனால், அதை மறுத்த நீதிபதிகள், 4 வார கால அவகாசம் அளித்து, வழக்கை ஏப்ரல் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இந்திய குடியுரிமை சட்டம் என்ன சொல்கிறது.?
அமெரிக்கா, கனடா போன்ற சில நாடுகளில், சட்டப்பூர்வமாகவே ஒருவர் இரட்டை குடியுரிமை வைத்திருக்கலாம். ஆனால், இந்தியாவில் ஒருவர் பல்வேறு குடியுரிமைகளை வைத்திருக்க சட்டத்தில் இடமில்லை. அதாவது, இந்திய குடியுரிமை வைத்திருப்பவர், வேறு எந்த ஒரு நாட்டின் குடியுரிமையையும் வைத்திருக்கக் கூடாது. அப்படி வேறு நாட்டின் குடியுரிமையை வைத்திருக்க வேண்டுமென்றால், இந்திய குடியுரிமையை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். அப்படி செய்யாத பட்சத்தில், அது சட்டவிரோதமானதாகும்.
ராகுல் காந்தியின் குடியுரிமை குறித்த சர்ச்சை எழுந்தபோதெல்லாம், அதை காங்கிரஸ் மறுத்துள்ளது. அதேபோல், இந்த சர்ச்சை தனது பெயரை கெடுக்க செய்யப்படும் முயற்சி என ராகுல் காந்தியே தெரிவித்துள்ளார். அவரது சகோதரி பிரியங்காவும், ராகுல் காந்தி இங்கேயே பிறந்து வளர்ந்த ஒரு இந்தியர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் என கூறியுள்ளார்.
இந்நிலையில், ராகுலின் குடியுரிமை குறித்து முடிவெடுக்க, மத்திய அரசுக்கு நீதிமன்றம் 4 வார கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.