பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, எரிபொருள் பயன்பாட்டை குறைப்பதையும், பொது உள்கட்டமைப்புகளின் மீதான அழுத்தத்தை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்ட தொடர் நடவடிக்கைகளை டெல்லி அரசு இன்று அறிவித்தது. அனைத்து டெல்லி அரசு அலுவலகங்களிலும் வாரத்திற்கு இரண்டு நாட்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் முறை செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்தார்.
மேலும், பொதுப் போக்குவரத்தின் பரவலான பயன்பாடு, காணொளிக் கூட்டங்கள் மற்றும் அனைத்துத் துறைகளிலும் எரிபொருள் சேமிப்பு ஆகியவற்றை நிர்வாகம் ஊக்குவித்து வருகிறது. இந்த நடவடிக்கைகளில், அதிகாரிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை குறைத்தல், வாராந்திர 'வாகனமில்லா தினம்' அனுசரித்தல், மற்றும் அரசு வாகனங்களுக்கு பதிலாக, பொதுப் போக்குவரத்தைத் தேர்ந்தெடுக்கும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் ஆகியவை அடங்கும்.
எரிபொருள் குறைப்பு
அரசு அதிகாரிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 20 சதவீதம் குறைக்கப்படும் என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார். தற்போது மாதந்தோறும் 200 முதல் 250 லிட்டர் வரை பெட்ரோல் அல்லது டீசல் பெற்றுவரும் அதிகாரிகளுக்கு இந்த குறைப்பு பொருந்தும்.
தனது விரிவான எரிபொருள் சேமிப்பு முயற்சியின் ஒரு பகுதியாக, அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனத் தொடரணியின் அளவையும் டெல்லி அரசு குறைத்துள்ளது. அரசு வாகனங்களுக்கு பதிலாக, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த தேர்வுசெய்தால், வாகனப்படிக்குத் தகுதியுள்ள அதிகாரிகளுக்கு 10 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
பொதுப் போக்குவரத்தை ஊக்கவித்தல்
மக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் 'வாகனமில்லா தினமாக' அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும், சாலை நெரிசலைக் குறைக்கவும் உதவும் வகையில், திங்கட்கிழமைகளில் டெல்லி மெட்ரோவைப் பயன்படுத்துமாறு குடிமக்கள் குறிப்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இணைப்பை மேம்படுத்தவும், அதிகமான மக்கள் தங்கள் அன்றாடப் பயணங்களுக்கு பொதுப் போக்குவரத்தை நம்பி இருப்பதை உறுதி செய்யவும், தலைநகரம் முழுவதும் உள்ள பேருந்து வழித்தடங்கள் மறுவடிவமைக்கப்படும் என்று ரேகா கூறினார்.
நிர்வாகம், கிட்டத்தட்ட 50 சதவீத அதிகாரப்பூர்வ கூட்டங்களை இணையவழியில் நடத்தவும் திட்டமிட்டுள்ளது. மேலும், இயன்ற இடங்களில் எல்லாம் அதிகமான காணொளிக் கூட்ட விசாரணைகளை நடத்துமாறு நீதிமன்றங்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், அடுத்த 3 மாதங்களுக்கு பெரிய அரசு நிகழ்ச்சிகள் எதுவும் ஏற்பாடு செய்யப்படாது என்று முதலமைச்சர் தெரிவித்தார். புதிய நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும் காலகட்டத்தில், டெல்லிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, ஒரு சிறப்பு பயண மேலாண்மைத் திட்டமும் தயாரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
